வீழ்வேன் என நினைத்தாயோ மரணத்திற்கே சவால் விடுத்த பாரதியின் பிறந்த நாள்..!
வீழ்வேன் என நினைத்தாயோ என மரணத்திற்கே சவால் விடுத்த பாரதிக்கு இன்று 139வது பிறந்த நாள். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மகாகவியின் சாதனைகளையும், தீர்க்கதரிசனத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு...
இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் மகாகவி பாரதி. சாதிகளால் பிளவு பட்டிருந்ததைக் கண்ட இந்த மீசைக் கவிஞன், அப்போதே சாதிகள் இல்லையடி பாப்பா என்று சாதிய மறுப்பு கருத்துக்களை துணிச்சலாக கூறினார்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று எகத்தாளமாய் கேள்வி கேட்டவர்கள் மத்தியில், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என உரக்கக் குரல் எழுப்பியவர். “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே” என பெண்ணுரிமையை உயர்த்திப் பிடித்தவர் பாரதி.
தமிழ்மொழி, தமிழ்நாடு, பாரத பூமி, சுதந்திரம் ஆகியவைதான் தம் வாழ்நாளில் அளவிலடங்கா காதல் கொண்டிருந்தவை. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று பெருமிதம் கொண்டார் பாரதி.
சுதந்திர போராட்டத்தின் போது வ. உ. சிதம்பரம், சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் இணைந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தை வேரறுக்க தீவிரமாக போராடியதால் அன்றைய அரசாங்கத்தால் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டவர்.
வீட்டில் வறுமை வாட்டியெடுத்தாலும் சுதந்திர தாகம் கொண்டு வஉசியின் கப்பல் நிறுவனம் தொடங்குவதற்காக ஊர் ஊராய் வசூலில் இறங்கினார் பாரதி.
சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பாடல் வரிகள் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இளைஞர்கள் அந்தப் பாடல்களைக் கேட்டு வீறுகொண்டு எழுந்தனர்.
பாரதியின் பிறந்த நாள் என்பது சம்பிரதாயமான நினைவுகூரல் அல்ல; அது மகத்தான மனிதத்துவத்தின் கொண்டாட்டம். கவிதையின் குதூகலம். காலத்தின் தீராத ஒரு புத்தகத்தை வாசிக்கும் பேரனுபவம்.
Comments