சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என போலீசார் தகவல்

0 11301

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்‍.

சென்னை நசரேத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை சித்ராவின் சடலம், தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. சித்ராவின் வலது கன்னம் மற்றும் தாடையில் ரத்தக் காயம், சம்பவத்தின் போது அவரது கணவர் ஹேம்நாத் உடனிருந்தது என அவரது மரணத்தில் சந்தேக ரேகைகள் படர்ந்தன.

இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என சந்தேகங்கள் வலுத்தன. இதனால் இந்த மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்திய போலீசார், இன்றும் விசாரணையை தொடர்ந்தனர்‍.

இந்த சூழ்நிலையில் சித்ராவின் உடற்கூராய்வு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்றது. ஒன்றரை மணிநேர பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சித்ராவின் மீதான அன்பின் மிகுதியால் அங்கு திரண்டிருந்த ஏராளமான பெண்கள் மற்றும் வயதானவர்கள் அவரது உடலைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதனைத்தொடர்ந்து சித்ராவின் உடல் ,சென்னை கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சித்ராவின் உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என ஏராளமானோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சித்ராவின் மரணத்தால் துக்கம், விசாரணை, குற்றச்சாட்டு என பரபரப்பாக நகர்ந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையின் தகவல் வெளியானது. சித்ரா கொலை செய்யப்படவில்லை என்றும், தூக்கிட்டு மூச்சுத்திணறியே உயிரிழந்திருக்கிறார் என்றும், பிரேத பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக, போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சித்ராவின் மரணத்தில் நீடித்து வந்த மர்மம் விலகியிருக்கிறது.

இதனிடையே சித்ராவை ஹேம்நாத் அடித்துக் கொலை செய்துவிட்டதாக சித்ராவின் தாயார் குற்றம்சாட்டியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments