971 கோடி ரூபாயில் பிரமாண்டமாக அமைகிறது புதிய நாடாளுமன்றம்... பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
புதிய நாடாளுமன்றம் தற்சார்பு இந்தியா என்ற கொள்கைக்கு சாட்சியாக இருக்கும் என்று கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக அமைய உள்ள நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சியில் சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு வெளிநாடுகளின் தூதர்கள், மத தலைவர்களும் பங்கேற்றனர். கர்நாடகாவின் சிரிங்கேரி மடத்தை சேர்ந்தவர்கள் பூமி பூஜைக்கான சடங்குகளை செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014 ஆம் ஆண்டு முதன் முதலாக தான் நாடாளுமன்றத்திற்குள் எம்பியாக தலை தாழ்த்தி வணங்கி அடியெடுத்து வைத்ததை என்றும் மறக்க முடியாது என்று நினைவு கூர்ந்தார். ஜனநாயகம் இந்தியாவின் கலாச்சாரம் என்று குறிப்பிட்ட பிரதமர் பல நூற்றாண்டு அனுபவத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஜனநாயக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சுதந்திரத்திற்குப் பின் பழைய நாடாளுமன்ற கட்டிடம் இந்தியாவிற்கு புதிய திசைகளை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார். புதிய நாடாளுமன்ற கட்டிடம், தற்சார்பு இந்தியா என்ற கொள்கைக்கு சாட்சியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
130 கோடி இந்தியர்களும் பெருமை கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று என பிரதமர் பெருமிதத்துடன் கூறினார். 100வது சுதந்திர தினத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்பட அடுத்து 27 ஆண்டுகளில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.
971 கோடி ரூபாய் செலவில், 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டும் பணியை டாடா நிறுவனம் மேற்கொள்கிறது. 2022-ம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளுடன் கட்டப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும். 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதால், அதற்குள் புதிய நாடாளுமன்றம் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் தொல்லியல் சொத்தாக பராமரிக்கப்படும்.
Comments