கணவரை எரித்துக் கொன்ற ஒத்தரோசா..! ஸ்மார்ட் போன் பரிசால் விபரீதம்

0 27470
கணவரை எரித்துக் கொன்ற ஒத்தரோசா..! ஸ்மார்ட் போன் பரிசால் விபரீதம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே முக நூல் மற்றும் டிக்டாக் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த பெண்ணை தட்டிக்கேட்ட கணவனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை தற்கொலையாக்க நாடகமாடிய ஊதாரி மனைவி காவல்துறையினரிடம் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பழனி படிக்கட்டு போல காதுகளில் அடுக்கிற்கு மேல் அடுக்காக கம்மல் மாட்டியிருக்கும் இவர்தான் கணவரை உயிரோடு எரித்த வழக்கில் போலீசில் சிக்கி இருக்கும் ஒத்த ரோசா பிரியா..!

 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சோம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சசிகுமாருக்கும், அதி பெரமனூரை சேர்ந்த பிரியாவுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு ஆண் மற்றும் 8 வயதில் ஒரு பெண் இருக்கும் நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக சசிக்குமார் தனது குழந்தைகளுடன் தீக்குளித்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சசிக்குமார், மற்றும் இரு குழந்தைகளையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சசிக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

கணவர் சசிக்குமார் தீக்குளித்ததாக மனைவி பிரியா காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்த நிலையில் சசிகுமார், நீதிபதியிடம் அளித்த மரண வாக்கு மூலத்தில் தன் மீதும் தனது பிள்ளைகள் மீதும் தனது மனைவி பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார் என குறிப்பிட்டு , தனது மனைவியின் கொலைபாதக செயலை அம்பலப்படுத்தினார். இதையடுத்து பிரியாவிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான பின்னணி தெரியவந்தது.

குடும்ப வறுமையை போக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சசிக்குமார், துபாய்க்கு வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கிருந்து மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தடையின்றி வாட்ஸ் அப்பில் பேசும் ஆசையில் தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி அனுப்பி வைத்துள்ளார் சசிகுமார்.

இந்த ஸ்மார்ட் போனில் கணவனுக்காக பதிவிறக்கம் செய்த வாட்ஸ் அப் செயலியோடு முகநூலில் நுழைந்து, டிக்டாக்கில் பயணித்து ஏராளமான ஆண் நண்பர்களை வளைத்துள்ளார் பிரியா.. கணவர் ஊரில் இல்லாததாலும், மாதம் தோறும் கணவன் தவறாமல் அனுப்பி வைத்த பணத்தாலும் பியூட்டி பார்லர், காதில் கம்மலுக்கு மேல் கம்மல் என ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார் பிரியா..!

தங்களது தாய் டிக்டாக்கில் திறமை காட்டுவதும் புதிது புதிதாக ஆண்களுடன் பேசுவதையும் கண்ட மகன் பிரதீப் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளான். இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்த சசிகுமார் தனது மனைவியை கண்காணிக்க தொடங்கியுள்ளார்.

கொரோனா காரணமாக வேலைக்கு செல்லாமல் சசிகுமார் வீட்டிலேயே இருந்ததால் வெளியில் சுற்ற முடியாத சூழலில் பவுசு பிரியா பரிதவித்துள்ளார். இதையடுத்து தனது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக்கட்ட கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே திட்டமிட்டுள்ளார் பிரியா. அதன் படி கணவன் தூங்கும் போது அவன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பது என முடிவு செய்து ஒரு கேனில் 5 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து மறைத்து வைத்துள்ளார் .

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளால் இயல்பு நிலை திரும்பியதும் பழையபடி தனது பாய் பிரண்டுகளுடன் உண்டு களிக்க வெளியில் சென்று விட்டு வீடுதிரும்பிய மனைவி ப்ரியாவிடம் சம்பவத்தன்று கணவர் சசிக்குமார் கடுமையாக சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனது இரு குழந்தைகளின் எதிர்காலம் கருதி மனைவியுடன் சமாதானம் அடைந்து உறங்கச்சென்றுவிட்டார்.

அனைவரும் இரவு படுக்கைக்கு சென்ற பின்னர் விழித்துக் கொண்டிருந்த ப்ரியா, தனது ரகசிய காதல் வாழ்க்கையை கணவரிடம் போட்டுக் கொடுத்த குழந்தைகளையும், தடையாக இருக்கும் கணவரையும் தீவைத்து எரிக்க திட்டமிட்டு, தான் ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோலையும் கணவர் மற்றும் குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீ மளமளவென பரவியதால் சசிக்குமார் தப்ப இயலாமல் கருகி சாய்ந்த நிலையில் அருகில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்றுவது போல நடித்து கூச்சல் போட்டுள்ளார் பிரியா , கணவரின் வாக்குமூலத்தால் அவரது படுபாதக தீவைப்பு செயல் அம்பலமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

கணவர் இல்லா தனிமையை ஸ்மார்ட் போனால் வசந்தமாக்க நினைத்து ,மொத்த வாழ்க்கைக்கும் சேர்த்து தீவைத்து விட்டு, ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றது வளர்ப்பு சரியில்லாத இந்த ஒத்தரோசா..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments