பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு தொல்லை கொடுத்தது யார் ? கலக்கத்தில் சீரியல் குடும்பம்

0 61314
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு தொல்லை கொடுத்தது யார் ? கலக்கத்தில் சீரியல் குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், முல்லைக்கு செல்போனில் தொல்லை கொடுத்த சீரியல் குடும்பத்தினர் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரையில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை சித்ரா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து, இல்லந்தோறும் பிரபலமான நடிகை சித்ரா, பூந்தமல்லி அருகே காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பிளசண்ட் டேஸ் என்ற ஓட்டலில் முதல் மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார். தனது வீடு இருக்கும் திருவான்மியூரில் இருந்து படப்பிடிப்புக்கு சென்று வர காலதாமதமாகிவிடும் என்பதால் அவர் படப்பிடிப்பு தளம் அருகே அமைந்துள்ள ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 24ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்ட சித்ரா, காதல் கணவர் ஹேமந்துடன், "ஆடி" காரில் படப்பிடிப்புக்கு சென்று வந்தார். செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு முடிந்து ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் இருவரும் திரும்பியுள்ளனர்.

முறைப்படி ஊரறியத் திருமணம் நடக்காத நிலையில், காதல் கணவருடன் ஒரே அறையில் தங்கி இருப்பது குறித்து சித்ராவின் தாயார் கண்டித்ததாகக் கூறப்படுகின்றது. ஹேமந்த் மீது சில குற்றச்சாட்டுக்களையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தாயிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சித்ரா, அதிகாலை 3 மணியளவில் தனது கணவர் ஹேமந்திடம் காரில் முக்கியமான பொருள் ஒன்றை மறந்து வைத்து விட்டதாக கூறி எடுத்து வர கூறியுள்ளார். அதனை எடுப்பதற்காக ஹேமந்த் வெளியே சென்று விட்டு திரும்பும் போது சித்ரா தங்கி இருந்த அறைக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஹேமந்த், அந்த ஓட்டலில் பணியில் இருந்த கணேசன் என்ற ஊழியரிடம் தகவலைத் தெரிவித்து மாற்றுச்சாவியின் மூலம் அந்த அறையின் கதவை திறந்துள்ளனர். 15 நிமிடங்களுக்குள்ளாக அங்கிருந்த மின் விசிறியில் புடவையால் தூக்கிட்ட நிலையில் நடிகை சித்ரா சடலமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹேமந்தும், கணேசனும் சேர்ந்து சித்ராவின் சடலத்தை இறக்கி படுக்கையில் கிடத்தியுள்ளனர்.

அவர் உயிரிழந்தது தெரியவந்ததால் நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தடயங்களை சேகரித்துள்ளனர். சித்ராவின் கன்னம், தாடை பகுதிகளில் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. தூக்கில் தொங்கும் போது வலிதாங்காமல் கைகளை வைத்து புடவையை அகற்ற உதறியபோது அவரது கையில் இருந்த நகங்கள் அவரது கன்னத்தில் பட்டிருக்கலாம் என்று அவரது நகத்தில் அதற்கான சதை பகுதிகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சித்ராவின் செல்போனைக் கைப்பற்றி அதில் அவர் யார் யாரிடம் பேசினார் என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர்.

இறுதியாக அவரது தாயாருக்கு சித்ரா வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருப்பது தெரியவந்தது. அதில் "ஹேமந்த் என் கணவர், எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒரு மாதகாலமாகவே சித்ராவின் வீட்டில் காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் ஒருபக்கம், படப்பிடிப்பில் ஏற்பட்ட பணிச்சுமை ஒரு பக்கம் என சித்ரா தவித்துள்ளார்.

இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த், ஓட்டல் ஊழியர் கணேசன், சித்ராவின் தாய் தந்தை ஆகியோரை ஆகியோரை விசாரித்து வரும் காவல்துறையினர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனர் மற்றும் நடிகர்- நடிகைகளிடமும் முல்லைக்கு மன அழுத்தம் ஏற்படும் அளவுக்கு தொல்லை கொடுத்தவர்கள் குறித்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சித்ராவின் தந்தை காமராஜ் ஓய்வு பெற்று உதவி ஆய்வாளராக இருந்தாலும், சாதாரண நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கிய சித்ரா குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து சின்னத்திரையில் முன்னணி நாயகியானது குறிப்பிடத்தக்கது. முல்லையின் மரணம் சின்னத்திரை குடும்பத்தினரிடையே கடும் கலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை காலம் காலமாக சொல்லி வந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை மன அழுத்தத்தில் தள்ளாமல் பார்த்துக் கொள்வது சுற்றியுள்ள உற்றார் உறவினர்களின் கடமை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments