மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள் விற்பனை செய்யக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான் என்றும், புதிய வேளாண் சட்டத்தால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் அதை எதிர்க்கவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்குச் சென்று வழிபட்டார்.
நாகூருக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாத்தியங்கள் முழங்க வரவேற்றுத் தர்காவுக்கு அழைத்துச் சென்றனர். தர்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாஹிப் தலைமையில் துவா ஓதப்பட்டது.
தர்க்காவில் மழையால் சேதமடைந்த சுற்றுச்சுவர், கீழ்க்கரைச் சாலை, குளம் ஆகியவற்றைப் பார்வையிட்ட முதலமைச்சர் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு என்னும் ஊரில் முகாமில் தங்கியுள்ளவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு அரிசி, பருப்பு, வேட்டி சேலை போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். கனமழையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 4 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கொக்காலடி, பாமணி ஆகிய ஊர்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய வயல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
தென்னவராயநல்லூரில் விவசாயிகளிடம் பேசிய அவர், புதிய வேளாண் சட்டத்தால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் அதை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
குவளைக்கால், நன்னிலம், கொல்லுமாங்குடி ஆகிய ஊர்களில் சேதமடைந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டபின், தரங்கம்பாடி வட்டம் நல்லாடை என்னும் ஊருக்குச் சென்றார்.
தரங்கம்பாடி வட்டத்தில் 29 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிரும், 700 ஏக்கரில் தோட்டக்கலைப் பயிரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றைப் பார்வையிட்ட அவர் உரிய இழப்பீடு வழங்கும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.
Comments