ருத்ரனாக மாறிய ருத்ரபதி ... அடி தாங்க முடியாமல் ஓடிய கொள்ளையன்!- ஏ.டி.எம் மையத்துக்குள் நடந்த போராட்டம்
ஏ.டி.எம்.மில் பணத்தை கொள்ளையடிக்க வந்த கொள்ளையனுக்கு வயது முதிர்ந்த காவலாளி ஒருவர் தர்ம அடி கொடுத்து விரட்டியடித்த சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோமன் சர்ச் அருகே தனியாருக்குச் சொந்தமான வங்கி இயங்கி வருகிறது. வங்கிக்கு அருகிலேயே ஏ.டி.எம் மையம் உள்ளது. 24 மணி நேர சேவை வழங்கும் இந்த மையத்தில் காவலாளிகள் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் , கடந்த 3 ஆம் தேதி இரவு ராமநாதபுரம் வீரபத்ர சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த 50 வயதுடைய ருத்ரபதி என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார் . அப்போது, தலைக்கவசம் அணிந்து ஆயுதத்துடன் வந்த மர்ம ஆசாமி ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து காவலாளியை உடனடியாக சிசிடிவி கேமராவை அணைக்க கூறினார். விளக்குகளை அணைக்க கூறியும் தாக்க முற்பட்டார்.
ஆனால், காவலாளி மறுத்து ஆயுதத்துடன் வந்த கொள்ளையனை எதிர்த்து சண்டையிட தொடங்கினார். எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்காத கொள்ளையன் காவலாளியுடன் சண்டையில் ஈடுபட்டனார். ஏ.டி.எம். மையத்துக்குள் இருவரும் 15 நிமிடங்கள் போராடினர். தீரத்துடனும் துணிவுடனும் சண்டையிட்ட காவலாளி கொள்ளையனின் கையிலிருந்த ஆயுதத்தை பிடுங்கியதோடு தலைக்கவசத்தையும் கழற்றி சராமரியாக கொள்ளையனை அடித்தார். ஒரு கட்டத்தில் காவலாளியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கொள்ளையன் தப்பி ஓடியே விட்டான்.
காவலாளி துணிச்சலுடன் சண்டையிட்டதால் ஏடிஎம் மையத்துக்குள் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஜார் காவல் நிலைய போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவனை தேடி வருகின்றனர். தீரத்துடன் செயல்பட்ட காவலாளியை வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். கொள்ளையனுடன் காவலாளி சண்டையிட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
கொள்ளையன் தாக்கியதில் காவலாளி ருத்ரபதிக்கு கை, தாடை போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments