மாசு கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுக் கிடக்கிறது -உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

0 3094

மாசு கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுக் காணப்படுவதாகவும், டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

அமராவதி ஆற்றில் ஆலைக்கழிவுநீர் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றப் பதிவாளர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பதில்மனு தாக்கல் செய்ய அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

கோதாவரி ஆற்றுநீரில் நிக்கல், காரீயம் அதிகம் கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்த நீதிபதிகள், விரைவில் பதில்மனு தாக்கல் செய்யத் தவறினால் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என எச்சரித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுக் காணப்படுவதாகவும், டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இயற்கை வளங்களை மாசுபடுத்தி நோய்கள் உருவாகக் காரணமாகிவிட்டு மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பதால் என்ன பயன்? என வினவினர். ஏற்கெனவே நொய்யல் ஆறு காணாமல் போய்விட்டதாகக் கூறியது நீதிபதிகள்,நீராதாரங்களை மாசுபடுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரத் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments