ஒரே இரவில் 3 பேர் கொலை... கொடிகட்டிப் பறக்கும் ரௌடிகள் தர்பார்

0 25799

வேலூர் அருகே புழல் சிறை வார்டன் உட்பட ஒரே இரவில் 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். நண்பனை கொலை செய்த கும்பலை பழிவாங்கும் நோக்கில் சுற்றிக் கொண்டிருந்தவர்களை அந்த கும்பல் முந்திக்கொண்டு வெட்டி சாய்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வேலூர் மாவட்டம் தோட்ட பாளையம் பகுதியை சேர்ந்த அஷோக் என்பவர் 10 மாதங்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட ரௌடி கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  குடிபோதையில் தங்களிடம் தகராறு செய்ததால் அஷோக்கை அந்த கும்பல் கொன்றதாகக் கூறப்படும் நிலையில், 7 பேரும் சிறை சென்றுவிட்டு அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

அஷோக்கின் நெருங்கிய நண்பரான அரியூரைச் சேர்ந்த காமேஷ், நண்பனை கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. சி.எம்.சி மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்த நண்பன் திவாகரையும் புழல் சிறை வார்டனாகப் பணியாற்றி வந்த நண்பன் தணிகைவேலையும் தனது திட்டத்தில் சேர்த்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வாரத்துக்குள் 7 பேரையும் பழிதீர்க்க மூவரும் காத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், இவர்களது திட்டம் அந்த கும்பலுக்கு தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து முந்திக்கொண்ட 7 பேர் கும்பல், செவ்வாய்கிழமை இரவு ஊசூர் அடுத்த புலிமேடு பகுதியில் வைத்து திவாகரையும் தணிகை வேலையும் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து அரியூர் வந்து, காமேஷையும் வெட்டிக் கொன்றதாக போலீசார் கூறுகின்றனர். இந்த மூன்று கொலைகளையும் குடிபோதையில் அரங்கேற்றிவிட்டு 7 பேரும் அந்தப் பகுதியிலேயே சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட 3 கொலைகளால் வேலூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ரௌடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments