வரி ஏய்ப்பு புகார்... செட்டிநாடு குழும நிறுவனங்களில் ரெய்டு
சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்பட நாடு முழுவதும் செட்டிநாடு குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்ஏஎம் ராமசாமி செட்டியாருக்கு பிறகு, அவருடைய வளர்ப்பு மகன் அய்யப்பனை தலைவராக கொண்டு செட்டிநாடு குழுமம் செயல்பட்டு வருகிறது. அக்குழுமத்துக்கு சொந்தமாக நாட்டின் பல இடங்களில் கடந்த 2015ம் ஆண்டில் வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில் மீண்டும் வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து இன்று சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அக்குழுமத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான செட்டிநாடு பில்டர்ஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சுமார் 15 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அந்த அலுவலக ஊழியர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் புலியூர் பகுதியில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேசன் அலுவலகத்திலும் காலை 8 மணியில் இருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 6 வாகனங்களில் வந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments