ஆர்டிக் பிரதேசத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்வு... 30 ஆண்டுகளில் பனிப்பாறைகள் கரைந்து விடும் அபாயம்!

0 2041

ஆர்டிக் பிரதேசத்தின் அதிக  வெப்பம் நிலவிய  ஆண்டுகளில் ஒன்றாக 2020 ஆம் ஆண்டு கருதப்படுகிறது. 

கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் உலகில் பனிப்பாறைகள் உறைந்த வட துருவமான ஆர்க்டிக் பெருங்கடலின் வெப்ப நிலையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 8 - ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் ,  '' உலகின் மற்ற பகுதிகளை விட இரண்டு மடங்கு வேகமாக வடதுருவம் வெப்பமடைந்து வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதால் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கிறது.  பொதுவாக ஆர்டிக் பெருங்கடலில் கோடைக்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதும், குளிர்காலத்தில் உறைவதும் வழக்கமானது. ஆனால் இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் பனிப்பாறைகள் அதிகளவில் உருகியுள்ளன. குளிர்காலத்தில் குறைந்த அளவே உறைந்துள்ளது.

ஆர்டிக் பிரதேசத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டு மிக அதிக வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. ஆர்டிக் பெருங்கடலில் நிறைந்து காணப்பட்ட பனிப்பாறைகள் அதீத வெப்பத்தால் இருந்த தடமே தெரியாமல் பாதியாக கரைந்து போயுள்ளன. 

 செயற்கைக்கோள்கள் மூலம் பனியின் தடிமன் அளவிடப்பட்டு வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆய்வில் வட துருவத்தில் உறைந்து நிற்கும் பனிப்பாறைகள் மெல்லியதாகவும், எளிதாக கரையக்கூடியதாகவும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1982 முதல் 2010 ஆண்டு வரை நிலவிய சராசரி வெப்ப அளவை விட ஆர்டிக் பெருங்கடலின் வெப்ப அளவு தற்போது 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதே  நிலை நீடித்தால், அடுத்த 30 ஆண்டுகளில் பனிபாறைகள் வேகமாக உருகி 2050 ஆம் ஆண்டில் ஆர்டிக் பெருங்கடலில் பனிபாறைகளே இல்லாத நிலை ஏற்படும் '' என்று சொல்லப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments