சூரியனுக்கும் டூப்ளிகேட்... செயற்கை சூரியனை சுவிட்ச் ஆன் செய்தது சீனா!

0 62162

சீனாவின் செங்க்குடு (( chengdu )) நகரில் செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியைத் தொடர்ந்து, சீனா கையில் எடுத்த 'செயற்கை சூரியன்' என்று அழைக்கப்பட்ட ’அணுக்கரு இணைவு உலை’யை வெற்றிகரமாக ’சுவிட்ஸ் ஆன்’ செய்து இயக்கியுள்ளது. இந்த செயற்கை சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் சூரியனை விடவும் 10 மடங்கு அதிகமாக உள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள அணு  உலைகளில் அணுக்கரு பிளவு வினை மூலம் தான் ஆற்றல் பெறப்படுகிறது. அணு உலைகளில், யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை நியூட்ரான் மூலம் தாக்கி சிறுசிறு அணுக்களாக உடைக்கும் போது, அபரிமிதமான ஆற்றல் வெளிப்படும். இந்த ஆற்றலிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. இந்த அணுக்கரு பிளவு வினையிலிருந்து ஆபத்தை ஏற்படுத்தும் கதிர்வீச்சுகளும், அணுக்கழிவுகளும் அதிகளவில் வெளிப்படுகின்றன.

image

இதற்கு நேர் எதிரானது அணுக்கரு பிணைப்பு வினை. அதாவது, அணுக்கரு பிணைப்பு உலைகளில் ஹைட்ரஜன், தூத்தேரியம் உள்ளிட்ட அணுக்கள் ஒன்றாக இணைக்கப்படும். அணுக்கரு இணைவின் போது வெளிப்படும் ஆற்றல் அணுக்கரு பிளவை விடவும் நூறுமடங்கு அதிகமாக இருக்கும். மேலும், இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அணுக்கதிர் வீச்சு எதுவும் வெளிப்படாது. அணுக்கழிவும் குறைவாகவே இருக்கும். அதனால், சமீப காலமாகவே உலக விஞ்ஞானிகள் பலரும் தூய்மையான ஆற்றலைப் பெறும் நோக்கில் பாதுகாப்பான அணுக்கரு  பிணைப்பு உலையை உருவாக்கும் முயற்சியில்  ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சீனாவின் செங்க்டுவுக்கு அருகே  HL-2M Tokamak எனப்படும் அணுக்கரு உலையை சீனாவின் National Nuclear Corporation அமைத்துள்ளது.1950-  களில் சோவியத் யூனியன் அதிகாரிகள் வழங்கிய தொகாமக் அணு உலையை அடிப்படையாகக் கொண்டு, முதலில் அணுக்கரு பிணைப்பு உலையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கத் தொடங்கினர். பிறகு, 2006 - ம் ஆண்டிலிருந்து சொந்தமாக அணுக்கரு பிணைப்பு உலையை உருவாக்கி மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

image

பல ஆண்டுகளாகவே சோதனை செய்யப்பட்டுவந்த  HL-2M Tokamak அணு உலையை கடந்த வெள்ளிக்கிழமையன்று சீனா முதன்முதலாக, சுவிட்ச் ஆன் செய்து இயக்கிப் பார்த்தது. ஹைட்ரஜன் மற்றும் தூத்தேரியம் வாயுக்களால் ஆன சூடான பிளாஸ்மா வளையத்துக்குள் வலிமையான காந்த புலங்களை செலுத்தியபோது, அணுக்கரு பிணைப்பு வினை ஏற்படத் தொடங்கி, 150 மில்லியன் டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை உருவானது. இது சூரியனின் மையத்தில் நிலவும் வெப்ப நிலையை விடவும் 10 மடங்கு அதிகமாகும்.

சூரியனைப் போன்றே  HL-2M Tokamak அணு உலையில் அணுக்கரு பிணைப்பு வினை நடைபெறுவதால், இது செயற்கை சூரியன் என்று அழைக்கப்படுகிறது. அணு சக்தியின் பாதுகாப்பான மற்றும் தூய்மையான ஆற்றலைப் பெறும் உலகளாவிய முயற்சியில் இந்த சோதனை ஒரு முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

சீனாவைப் போன்று, பிரான்ஸ் நாட்டில் உள்ள ITER ஆய்வுக் கூடமும் உலகின்  மிகப்பெரிய அணுக்கரு பிணைப்பு உலையை உருவாக்கி வருகிறது.  2025 -ஆம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அணு உலையை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments