ஏ.சி யில் குளிர்ச்சியும் வரும். நல்ல பாம்பும் வரும். - ஜாக்கிரதை!
சென்னை பூந்தமல்லியில்,ஏ.சி இயந்திரத்திற்குள் இருந்து 6 அடி நீள நல்ல பாம்பு பிடிக்கப்பட்டது.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று திங்கட்கிழமை காலை, அவர் கடைக்கு வந்த போது கடைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ஏ.சி. இயந்திரதிற்குள் இருந்து புஸ் புஸ் என்று ஏதோ சத்தம் வருவதை கேட்டார். மின் கோளாறு காரணமாக ஏ.சி இயந்திரத்திலிருந்துதான் சத்தம் வருகிறது என்று நினைத்தார். பின்பு ஏ.சி இயந்திரத்தை இயக்காமல் நிறுத்தி விட்டார்.
அதற்குப்பின்பும் ஏ.சி யிலிருந்து அந்த வினோதமான சத்தம் எழுந்துள்ளது. திரும்பவும் சத்தம் வருவதை கண்டு ரஞ்சித் குமார் ஏ.சி யின் உள்ளே பார்த்தபோது அதனுள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் ஏ.சி. இயந்திரத்தை கழற்றி உள்ளே பார்த்தபோது சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு இருந்தது. அதனை எச்சரிக்கையாக பிடித்து வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.
புறநகர் பகுதிகளில், மழைக்காலங்களில் தவளைகள் அதிகமாக காணப்படும். அந்த தவளைகள் கத்தி திரியும் போது அவற்றை பிடிக்க பாம்புகள் வெளியே வருவது வாடிக்கை. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆனால், செல்போன் கடையின் ஏ.சி இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments