எல்லைத்தாண்டி உள்ளே வந்த பாகிஸ்தான் சிறுமிகள். பரிசுப்பொருட்களுடன் பத்திரமாக அனுப்பிய இந்தியா!

0 15795
எல்லை தாண்டிய பாகிஸ்தான் சிறுமிகள் பரிசுப்பொருட்களுடன் திரும்ப ஒப்படைப்பு

இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த இரண்டு பாகிஸ்தான் சிறுமிகளை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு,நிறைய பரிசுப்பொருட்களோடு திரும்ப பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்த சுவாரஸியமான சம்பவம் நடந்துள்ளது. 

 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று காலை வழக்கம் போல இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். 

 அத்துமீறி நுழைந்தவர்கள் பள்ளிச்சிறுமிகள் போல் சின்னப்பெண்களாக இருக்கவே எல்லைப்பாதுகாப்பு படையினர் எந்தவித தாக்குதலும் நடத்தாமல் எச்சரிக்கையாக செயல்பட்டனர். அந்த இரண்டு சிறுமிகளையும் கவனமாக பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

 சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அப்பாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த லைபா சபீர்,சனா சபீர் என்பது தெரியவந்தது.மேலும், அந்த இரண்டு சிறுமிகளும் பொழுதுபோக்காக சுற்றித்திரியும் போது தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த இரண்டு சிறுமிகளுக்கும் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த இந்திய படையினர், சிறுமிகளை பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன் காரணமாக, பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷங்கன் டா பாக் பகுதியில் உள்ள இருநாட்டு எல்லைக்கட்டுப்பாடு பகுதி வழியாக அந்த இரண்டு சிறுமிகளும் இன்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.அப்படி திரும்ப ஒப்படைக்கும் போது அந்த சிறுமிகளுக்கு கைகள் நிறைய ஏராளமான பரிசுப்பொருட்களையும் வழங்கி அவர்களை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தனர் இந்திய படையினர்.

தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுமிகள், இந்திய எல்லைப்படையினரின் கவனமான நடவடிக்கையால் பத்திரமாகவும் ஏராளமான பரிசுப்பொருட்களுடனும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments