ஆந்திராவில் மர்ம நோயால் 350-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர்

0 3005
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரில் கடந்த 4ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 3 பேர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தனர். இதேபோல் அடுத்தடுத்த நாட்களில்  மக்கள் தொடர்ந்து மயங்கி கீழே விழுந்த நிலையில்,  இதுவரை 18 குழந்தைகள் உட்பட 350 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வித்தியாசமான குரலில் சத்தமிடுவதோடு, கை,கால் வலிப்பும் ஏற்பட்டுவதால் நோயின் தன்மை அறியாமல் மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மக்கள் திடீரென மயங்கி விழும் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால், ஒரு சிலர் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மருத்துவர்களிடம் மர்ம நோயின் பின்னணி குறித்து கேட்டறிந்தார்.

மேலும் என்ன நோய் என்று கண்டறிய மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு  ஒன்றையும் நியமித்துள்ளார். மக்கள் எதனால் மயங்கி விழுகின்றனர் என்பது தெரியாத நிலையில்,  குடிநீர் கலப்படத்தால் ஏற்பட்ட பாதிப்பா ? அல்லது சதிச் செயலா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments