ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு உருவபொம்மையை எரித்து திமுக போராட்டம்..!

0 9438

மு.க.ஸ்டாலினை இழிவுபடுத்தும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் பேசியதாகக் குற்றம்சாட்டி, திமுகவினர் சாலை மறியல், ராஜேந்திரபாலாஜி  உருவபொம்மையை எரிக்க முயற்சி, உருவபொம்மையை கொளுத்தியபோது தொண்டர் ஒருவருக்கு காயம், மோதலை தடுக்க போலீசார் தடியடி என விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் பரபரப்பும் நிலவியது.

விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசியபோது, ஒருமையில் கடுமையாக சாடினார்.

இதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முயற்சி செய்தபோது, போலீசார் அதைத் தடுத்து உருவ பொம்மையை பறிக்க முற்பட்டதால் களேபரம் உருவானது.

உருவபொம்மையை பிடுங்க இருதரப்பும் இழுபறியில் ஈடுபட்டிருந்தபோது அதன் மீது ஒருவர் பெட்ரோல் ஊற்றினார். பின்னர் போலீசார் அதன் மீது தண்ணீர் ஊற்றினர். இழுபறியில் சிக்கி சின்னாபின்னமான உருவபொம்மையை போலீசார் ஒருவழியாக மீட்டுச் சென்றனர்.

தள்ளுமுள்ளு, வாக்குவாதம், களேபரத்தை தொடர்ந்து திமுகவினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனிடையே திமுகவினரை கண்டித்து அதிமுகவினர் மறியலில் இறங்கியதால், அவர்களையும் போலீசார் கலைந்துபோகச் செய்தனர். 

காரியாபட்டியில் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். தீப்பிடித்தால் அணைப்பதற்கு கோணிச்சாக்குடன் வந்த போலீசார், கொளுத்தும் முயற்சியை தடுக்க முயன்றபோது பரபரப்பும் பதற்றமும் நிலவியது. 

விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி உருவபொம்மையை சற்றே பெரியதாக செய்து எடுத்து வந்த திமுகவினர், தேசபந்து மயானத்தில் எரிக்க முயற்சி செய்தனர். அதனை தடுக்க காவல் துறையினர் முயற்சி செய்தபோது, அங்கு கடும் தள்ளுமுள்ளு உருவானது. உருவபொம்மையை இழுக்கவும் பறிக்கவும் நடைபெற்ற இருதரப்பு முயற்சி, கிட்டத்தட்ட கயிறு இழுக்கும் போட்டி போல நடைபெற்றது.

பின்னர் மறியலில் ஈடுபட்ட திமுகவினர், உருவபொம்மையை எரிக்க முடியாவிட்டாலும், ராஜேந்திர பாலாஜி உருவப்படத்தை எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை பின்னர் போலீசார் கைது செய்தனர்.

இராஜபாளையத்தில் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில், ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரிக்க போவதாக திமுகவினர் அறிவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து போராட்டம் நடத்த அதிமுகவினரும் அங்கு குவிந்தனர். அமைச்சருக்கு ஆதரவாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

திமுகவினரோ, மற்றொரு பாதை வழியாக இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே, ராஜேந்திர பாலாஜி உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஆட்டோவில் கொண்டுவந்த உருவபொம்மையை எடுத்துச் செல்ல விடாமல் போலீசார் தடுக்க முயன்றனர். இந்த இழுபறியில் உருவபொம்மை வைக்கோலாக உதிர்ந்துவிட அதை திமுகவினர் எரித்தனர்.

இதனிடையே, அங்கு வந்த அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுகவினர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருவப் படத்தையும், அதிமுகவினர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தையும் எரித்தனர்.

செருப்பு வீச்சு, கல் வீச்சு என நிலைமை கைமீறிப் போகவே, போலீசார் தடியடி நடத்தினர். இதில், திமுகவை சேர்ந்த இமாம் சாதிக் என்பவருக்கு மண்டை உடைந்தது.

பின்னர் கயிறு கட்டி தடுத்து இரு தரப்பினரையும் போலீசார் பிரித்தனர். கைது நடவடிக்கையின்போதும் எதிர்ப்பு எழுந்ததால் அப்பகுதி அமர்க்களமாக காட்சியளித்தது. 

அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரிக்கும் போது, அங்கிருந்த திமுக தொண்டர் ஒருவருக்கு காலில் தீப்பற்றிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments