தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

0 2330
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில், கடலூர், சிதம்பரம், குறிஞ்சிபாடி, குமராட்சி உள்ளிட்ட இடங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் கருமேகங்கள் சூழ பெய்த மழையால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

மீண்டும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குவதால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக லால்பேட்டையில் 60 புள்ளி 8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மதுரையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான கோரிப்பாளையம், ஆரப்பாளையம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி, தல்லாகுளம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதே போன்று புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

உசிலம்பட்டியில் தொடர் மழை காரணமாக கண்மாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தூத்துக்குடி மாவட்டத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்றிரவு சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, உப்பாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அய்யனார் காலனி, ராஜூ நகர் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறிய குடியிருப்பு வாசிகள் சாலையில் தஞ்சமடைந்தனர்.

இதேபோல் மாநகராட்சிக்கு உட்பட்ட சிதம்பர நகர், டி.என்.டி. காலணி குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வெள்ளம் போல் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments