புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட உச்சநீதிமன்றம் அனுமதி : பிற கட்டுமானப் பணிகளுக்கு தடை

0 3988

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட அனுமதி வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், வழக்கில் தீர்ப்பு வரும் வரை மரங்களை வெட்டுவதற்கும், பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் தடை விதித்துள்ளது.

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், சுமார் 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, பிரதமர் மோடி வரும் 10ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். 2022ஆம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற  கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திரம் பெற்றதன் 75ஆவது ஆண்டில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அந்த கட்டிடம் தற்சார்பு இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில், ஏஎம் கான்வில்கர், தினேஷ் மாஹேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு நிலுவையில் உள்ளபோதே கட்டுமானத்திற்குரிய பணிகள்  தொடங்கப்பட்டு விட்டது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசு விளக்கம் அளிக்காவிட்டால் தடை விதிக்கப்படும் என உணர்த்தினர். 5 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசிடம் உரிய விளக்கங்கள் பெற்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை, கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து, திட்டம் தொடர்பான ஆவணப் பணிகள், பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவதற்கு மட்டும் அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், அதைத் தவிர்த்து வேறு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments