ஏலூருவில் மர்ம நோய் தாக்கம் : 300க்கும் அதிகமானோர் தலை சுற்றல், மயக்கத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை
ஆந்திராவில் மர்மநோய்க்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் தலை சுற்றல், மயக்கத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கானோருக்கு ஒரே நேரத்தில் பாதிப்பு ஏன் என்பதைக் கண்டறிய மத்தியக் குழு விரைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கி, ஏராளமான மக்கள் திடீரென தலை சுற்றி மயங்கி கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அதிகளவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட, 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், மயங்கி விழுதல் போன்றவை, பொதுவான அறிகுறிகளாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு இடையே ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றது போன்ற, எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, சிகிச்சைக்குப் பிறகு 170-க்கும் அதிகமானோர் வீடு திரும்பிய நிலையில், ஸ்ரீதர் என்பவர் மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏலூரு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், கவலைக்கிடமானவர்கள் விஜயவாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காரணம் தெரியாத இந்த பாதிப்பு தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், ஏலூரு அரசு மருத்துவமனை மருத்துவர்களுடன் கேட்டறிந்துள்ளனர்.
ஏலூரு சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு, வீடு வீடாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் ஆய்வக முடிவுகள் இயல்பு நிலையில் உள்ளதாகவும், அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. மேலும், உணவு, தண்ணீர், ரத்தம் உள்ளிட்டவற்றின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும், அதன்பின்னரே பாதிப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சிலர் இதனை உளவியல் நோய் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே, ஏலூரு பகுதியில் காற்று மற்றும் நீரின் தரத்தை ஆராய மாநில மற்றும் மத்திய அரசு தரப்பில் தலா ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை இன்று பிற்பகலுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, முதலமைச்சர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
Situation is under control at local govt hospitals in Eluru, West Godavari district, where patients were admitted with complaints of giddiness & epilepsy. All medical help has been provided to patients & everyone is safe: Andhra Pradesh Dy CM & Health Minister Alla Kali Krishna https://t.co/6Qi6KfbDmr
— ANI (@ANI) December 6, 2020
Comments