தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறைய வாய்ப்பு.!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருப்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், படிப்படியாக மழை குறையும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம்-பாம்பன் அருகே, மன்னார் வளைகுடா பகுதியில், நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் அதே இடத்தில் மையம் கொண்டுள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில், மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த இரு தினங்களுக்கு, நகரின் ஒருசில பகுதிகளுக்கு சாரல் மழைக்கு வாய்ப்பு உண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு, 35 முதல் 45 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், எனவே, இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை முதல் பழவேற்காடு வரையிலான கடலோர பகுதிகளில், 10 அடி உயரம் வரையிலும், தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலான கடலோரங்களில், சுமார் 11 அடி உயரம் வரையிலும், பேரலைகள் எழக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 10 சென்டி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது.
Comments