தமிழகம் வந்த மத்தியக் குழு சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு
தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் இன்று சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய உள்துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்றுச் சென்னைக்கு வந்தனர்.
இவர்களில் உள்துறை இணைச்செயலர் அக்னிகோத்ரி தலைமையிலான 4 பேர் முதலில் சென்னை வேளச்சேரி ராம்நகரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியைப் பார்வையிட்டனர்.
அதன்பின் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் தேங்கியுள்ள நீரைப் பார்வையிட்டனர்.
தாம்பரம் அருகே முடிச்சூரில் வெள்ளப் பாதிப்புக்கு இலக்கான பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பாதிப்புகளை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்.
பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிக்கு வந்த மத்தியக் குழுவினரைச் சந்திக்க விடாமல் பொதுமக்களைக் காவல்துறையினர் தடுத்தனர்.
ஆய்வை முடித்த மத்தியக் குழுவினர் காரில் புறப்பட்டபோது, செம்மஞ்சேரியைச் சேர்ந்த சிலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிசின் காரை மறித்துத் தங்கள் பகுதிக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்தனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் விட்டிலாபுரம், பூந்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
மத்திய நீர் ஆணையக் கண்காணிப்பு இயக்குநர் ஹர்ஷா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு சென்னை வேப்பேரியில் அழகப்பா சாலை, ஜோதி வெங்கடாசலம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
எண்ணூருக்குச் சென்ற மத்தியக் குழுவினர் பக்கிங்காம் கால்வாயையும், கொசஸ்தலையாற்று நீர் கடலில் கலக்கும் கழிமுகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நெய்தவாயலில் கனமழையின்போது சூறைக்காற்று வீசியதால் சேதமடைந்த வாழைத்தோட்டங்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
மீஞ்சூர் அருகே வஞ்சிவாக்கத்தில் ஏரிக்கரை உடைந்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
நாளை ஒரு குழுவினர் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் பகுதிகளிலும் மற்றொரு குழுவினர் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.
Comments