வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு
தமிழகத்துக்கு வந்துள்ள மத்தியக் குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய உள்துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்றுச் சென்னைக்கு வந்தனர். இந்தக் குழுவினர் 4 பேரைக் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிந்து இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியக் குழுவின் ஒரு பிரிவினர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அழகப்பா சாலை , ஜோதி வெங்கடாசலம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். மீட்பு பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மத்தியக் குழுவினருக்கு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் பாதிப்புகளை எடுத்துக்காட்டினர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களைச் சந்தித்த மத்தியக் குழுவினர் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் குறைகளைக் கேட்டறிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூருக்குச் சென்ற மத்தியக் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை ஆய்வு செய்தனர். அதன் பின் அத்திப்பட்டுக்குச் சென்ற அவர்களுக்கு வெள்ளப் பாதிப்பு தொடர்பாகப் புகைப்படங்களைக் கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
உள்துறை இணைச்செயலர் அக்னிகோத்ரி தலைமையிலான மற்றொரு பிரிவினர் சென்னை வேளச்சேரி ராம்நகரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியைப் பார்வையிட்டனர். வெள்ளப் பாதிப்புகளைப் புகைப்படங்களைக் காட்டி மத்தியக் குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் விளக்கினர்.
அதன்பின் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் தேங்கியுள்ள நீரைப் பார்வையிட்டனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பள்ளிக்கரணையில் தேங்கிவரும் நிலையில், அதைப் பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்கு வடியச் செய்யும் வழிகள் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
செம்மஞ்சேரியில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிக்குச் சென்ற மத்தியக் குழுவினருக்குப் புகைப்படங்கள் மூலம் மழைவெள்ளப் பாதிப்பு குறித்து விளக்கப்பட்டது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உடனிருந்தார்.
தாம்பரம் அருகே முடிச்சூரில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். வெள்ளநீர் வடிகால்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பாதிப்புகளை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நெய்தவாயலில் கனமழையின்போது சூறைக்காற்று வீசியதால் 500 ஏக்கர் பரப்பில் வாழைகள் முறிந்தும் சாய்ந்தும் சேதமடைந்தன. சேதமடைந்த வாழைத்தோட்டங்களை நீர் ஆணையக் கண்காணிப்பு இயக்குநர் ஹர்ஷா தலைமையிலான மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். பொதுப்பணித்துறைச் செயலர் மாணிக்கவாசகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் உடன் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் சாய்ந்து நீரில் மூழ்கிச் சேதமடைந்த நெற்பயிர்களையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
Comments