புயல் நிவாரணப்பணிக்கு 3 ஆயிரத்து, 758 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு கோரிக்கை
புயல் சேதங்களை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவிடம் புயல் நிவாரணப்பணிக்கு 3 ஆயிரத்து ,758 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று முதல் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர். உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் நேற்று தமிழகம் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது புயல், மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்துப் புகைப்படம், காணொலி ஆகியவற்றின் மூலம் குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வெள்ளப் பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிடுகின்றனர்.
ஒரு குழுவினர் வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளனர். இன்று பகல் பதினொன்றரை மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினரிடம் நிவர் புயல் நிவாரணமாக 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் வழங்க, தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை - எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் R.B.உதயகுமார், தற்காலிக நிவாரணமாக 650 கோடி ரூபாய் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments