தங்க குழந்தை கீதாஞ்சலி...பெருமைப்படுத்திய டைம் மேகசின்!- பின்னணியில் அசாத்திய கண்டுபிடிப்புகள்

0 2162
2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதாஞ்சலி

2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதாஞ்சலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலி ராவ். இவர் 15 வயது நிரம்புவதற்குள்ளாகவே பல விஞ்ஞான சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டில், சவாலான இளம் விஞ்ஞானி விருது,2018 ல் சுற்றுசூழலுக்கான இளைஞர் விருது என்ற விருதுகளையும் இரண்டு முறை 25000 டாலர் பரிசுத்தொகையையும் வாங்கி குவித்தவர்.

கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி என்று இவரை புகழ்ந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் இப்போது அமெரிக்காவின் டைம் இதழின் 2020 Kid of the Year எனப்படும் 2020 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தை விருதையும் வாங்கி அசத்தியுள்ளார். 

கீதாஞ்சலி 'கைன்ட்லி' (Kindly) என்ற, 'செல்போன்' செயலியை உருவாக்கினார். இது, 'ஆன்லைன்' துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலி இயங்குகிறது.

மேலும், டெத்திஸ் (Tethys )என்ற பெயரில் இவர் உருவாக்கிய கருவியின் மூலம் நீரில் கலந்துள்ள மாசு தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியும். இது போல ஒன்றல்ல ஆறு அரிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்தான் இந்த இளம் விஞ்ஞானி.

அது மட்டுமல்ல, போதைப் பொருளுக்கு அடிமையாவதில் இருந்து மீள்வது உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்கா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கீதாஞ்சலி ராவ்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ‘டைம்’ இதழ் நடத்திய போட்டியில் 5 ஆயிரம் போட்டியாளர்களுக்கு இடையே கீதாஞ்சலி ராவ் 2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாகத் தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக டைம் இதழின் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் பெருமையையும் பெற்றார்.

அவரது கண்டுபிடிப்புகள் பற்றி கீதாஞ்சலி ராவ் கூறும் போது,

புரிந்து கொள்ளுங்கள் அதை உங்கள் திறமையால் அலசுங்கள், ஆய்வு செய்யுங்கள், அதன்மீது கட்டமைப்பை உருவாக்குங்கள், தொடர்பு கொள்ளுங்கள் என்ற 5 செயல்பாடுகளை பின்பற்றி வருகிறேன். நான் சில கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளேன். என்னால் அதை உருவாக்க முடியும் போது மற்றவர்களாலும்  அதைச் செய்ய முடியும்.

உலகில் எத்தனையோ பிரச்சினைகள் தற்போது உருவாகியுள்ளன. அதை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். பருவநிலை மாற்றம், சைபர் புல்லியிங் எனப்படும் ஆன்-லைன் சீண்டல்கள் போன்ற பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி (Anjelina Jolie) டைம் பத்திரிகைக்காக கீதாஞ்சலியை பேட்டி கண்டார். அந்த பேட்டியில் கூட அவரது புத்திக்கூர்மையும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உறுதியையும் கண்டு வியந்து கீதாஞ்சலியை ஏஞ்சலினா வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பாரதி, ராம் ராவுக்கு மகளாகப்பிறந்த கீதாஞ்சலி ராவ் தன் சாதனைகளின் மூலம் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments