தனுஷ்கோடி தேவாலயம் சுவர் இடிந்தது.. தேவாலயத்தை பாதுகாக்க மக்கள் வேண்டுகோள்.!
தனுஷ்கோடியில் வரலாற்று சிறப்புமிக்க தேவாயலத்தின் சுவர் புரெவி புயலினால் பெய்த கனமழையினால் இடிந்து விழுந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நுழைவு வாயிலாக தனுஷ்கோடி துறைமுகம் விளங்கியது. இந்த காலக்கட்டத்தில் பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கற்களைக் கொண்டு தனுஷ்கோடியில் அழகிய தேவாலயம் கட்டப்பட்டது . கடந்த 1964-ஆம் ஆண்டு டிசம்பர் 22 - ஆம் தேதி தனுஷ்கோடியை தாக்கியப் புயலால் ரயில் நிலையம், துறைமுகக் கட்டடங்கள்,சுங்க நிலையம் ஆகியவை இடிந்து போயின. ஆனால் , இந்த தேவாலயம் மட்டும் சிறிய அளவில் இடிபாடுகளுடன் தப்பியது. நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த தேவாலயத்தைக் காண தினமும் ஆயிரக்கணக்காண சுற்றுலாபயணிகள் தனுஷ்கோடி வந்துச் செல்கின்றனர். வரலாற்று சின்னமான இந்த தேவாலயத்தில் உள்ள பவளப்பாறைகளையும், சுண்ணாம்பு கற்களையும் சமூக விரோதிகள் சிலர் எடுத்து செல்வதும் உண்டு.
தனுஷ்கோடி புயலுக்குப் பின்னர் சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ள தேவாலயம்,கோவில்,மருத்துவமனை,பள்ளிக்கூடம் உள்ளிட்ட கட்டடங்களை அதன் பழமை மாறாமல் பராமாரித்து பாதுகாக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தரப்பில் ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. பிறகு, அந்த திட்டம் ஏனோ கைவிடப்பட்டது. தற்போது, புரெவிப் புயலினால் தனுஷ்கோடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், தேவாலயத்தின் மேற்குபக்க சுவர் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது., இதனால், தனுஷ்கோடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. தனுஷ்கோடியை புயல் தாக்கியதன் அடையாளமாக எஞ்சியிருக்கும் கட்டங்களை பாதுகாக்க உறுதியான திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று தனுஷ்கோடி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments