'100 பவுன் நகைகள் ; மாற்றுத்திறனாளி மனைவியை கொலை செய்ய 2 விஷப்பாம்புகள்' - நீதிமன்றத்தில் பாம்பாட்டி கண்ணீர்
மனைவியை கொலை செய்வதற்காக தன்னிடம் ரூ. 7,000 கொடுத்து விஷப் பாம்புகளை வாங்கியதாகக் கேரளாவில் மனைவியைப் பாம்பைவிட்டுக் கடிக்க வைத்துக் கொலைசெய்த வழக்கில் பாம்பாட்டி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உத்ரா. இவரது கணவன் சூரஜ். உத்ரா மாற்றுத்திறனாளி ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான். பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு உத்ரா தூங்கிக் கொண்டிருந்த போது, காலில் திடீரென ஏதோ கடித்துவிடவும் அலறி எழுந்து சத்தம் போட்டுள்ளார். கணவர் சூரஜ் உடனடியாக உத்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். திருவல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உத்ரா, 15 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். பிறகு, கடந்த மே மாதம் 6 ஆம் தேனி தன் படுக்கையறையில் வாயில் நுரை தள்ளியபடி உத்ரா கிடந்தார். உடல் நீல வண்ணத்துக்கு மாறியிருந்தது. நீண்ட நேரமாகியும் எழாத உத்ராவை எழுப்ப அவரின் தாயார் அறைக்கு வந்தார். உத்ராவைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இரண்டாவது முறை பாம்பு கடித்ததில் உத்ரா இறந்து போனார்.
இத்தனைக்கும் உத்ராவின் அறை 2 வது மாடியிலிருந்தது. ஏ.சி வசதி கொண்ட அறை. இதனால், எப்படி அறைக்குள் பாம்பு வந்திருக்க முடியும் என்று குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. உத்ராவை இரண்டு முறை பாம்பு கடித்த போதும் உடன் கணவர் சூரஜ்தான் இருந்தார் என்பதும் கேள்வியை எழுப்பியது. முதல்முறை உத்ராவை பாம்பு கடித்த போது, சூரஜ்தான் ஒரு சாக்குபையில் போட்டு பாம்பை வெளியே கொண்டு போயிருக்கிறார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் உத்ரா மரணம் குறித்து சூரஜ் மீது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.
விசாரணையில் பல உண்மைகள் வெளி வந்தன. ருத்ராவுக்கு 100 பவுன் நகை போட்டு சூரஜ்க்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். உத்ராவின் நகைகளை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து விற்று சூரஜ் ஊதாரித்தனமாகச் செலவு செய்து வந்துள்ளார். மேலும், நகைகள் வாங்கி வருமாறும் ருத்ராவை கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், யாருக்கும் சந்தேகமில்லாத வகையில் மனைவியைக் கொல்ல முடிவெடுத்த சூரஜ் பாம்பை வைத்துக் கடிக்க வைத்து உத்ராவை கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை கொல்லம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பாம்பாட்டி சுரேஷ் அப்ரூவராக மாறியுள்ளார். நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, உத்ராவை கடித்த பாம்பின் புகைப்படத்தைக் காட்டி இதுதான் நீங்கள் சூரஜ்க்கு கொடுத்த பாம்பா? என்று விசாரணை நடந்தது. அப்போது, கதறியழுத சுரேஷ், என்னால்தான் சூரஜ் ருத்ராவை கொலை செய்து விட்டார் என்று கண்ணீர் விட்டார். அப்போது, நீங்கள் கொலைக் குற்றவாளி இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை தேற்றினார். பிறகு சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், '' தான் ஒரு நல்ல பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் பாம்பை சூரஜ்க்கு கொடுத்தேன். கண்ணாடி விரியன் பாம்புகளின் குட்டிகளை நல்ல பாம்பு சாப்பிடும். அப்படி, கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகளை நல்ல பாம்பு சாப்பிடுவதைப் பார்க்க எனக்கு ஆசை என்று கூறி என்னிடமிருந்து இரு பாம்புகளையும் வாங்கி சென்றார்.
இதற்காக எனக்கு 7,000 பணம் கொடுத்தார். இந்த நிலையில், செய்தித் தாள்களில் சூரஜ் தன் மனைவியைப் பாம்பை கடிக்க வைத்துக் கொன்றது குறித்த செய்தியை படித்தேன். உடனடியாக, சூரஜை தொடர்பு கொண்டேன். அவர் போனை எடுக்கவில்லை. அடுத்த நாள் மற்றொரு செல்போன் எண்ணிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார் சூரஜ். அப்போது, அவரிடம் நீங்கள் மிகப் பெரிய பாவம் செய்து விட்டீர்கள்' என்று சொன்னேன். அதற்கு, சூரஜ், 'மாற்றுத்திறனாளி மனைவியுடன் வாழப் பிடிக்கவில்லை என்பதால் இப்படிச் செய்ததாகக் கூறினார். மேலும், இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது. இது பாம்பு தோசம் என்று கூறி எல்லாரிடமும் சமாளித்து விட்டேன். வெளியே சொன்னால் நீயும் மாட்டிக் கொள்வாய் 'என்று என்னை மிரட்டினார்.
கடந்த பிப்ரவரி மாதம் என்னை போனில் தொடர்பு கொண்ட சூரஜ், என்னிடமிருந்து பாம்பு கேட்டார். மார்ச் 21 ஆம் தேதி பாம்புகளை கொடுத்தேன். வழக்கமாக நான் பிடிக்கும் பாம்புகளை வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் காட்டில் விட்டு விடுவேன். எனக்கு பணம் தருவதாகக் கூறியதால் சூரஜ்க்கு பாம்பைக் கொடுத்தேன். சூரஜ் தன் மனைவியை நான் கொடுத்த பாம்பை வைத்துக் கொன்றதால் நான் மிகுந்த வேதனையடைந்தேன். சிறையில் என்னுடன் இருந்த மற்றொரு கைதிதான் உண்மையை நீதிமன்றத்தில் சொல்லி விடு என்று அறிவுரை தந்தார். தொடர்ந்து, நான் அப்ரூவராக மாறினேன் '' என்று கூறியுள்ளார்.
Comments