கனமழையால் தளும்பும் கடலூர் மாவட்டம்..
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண்பாதை நீரில் மூழ்கியது.
திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாக்களில் உள்ள தெத்தேரிபாதை, செளந்திரசோழபுரம், கோட்டைக்காடு, பெண்ணாடம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்து, மூலவர் சன்னிதி முதல் கோவில் உட்பிரகாரம் முழுவதும் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் மழை நீர் சாலையில் ஓடுவதால் பண்ருட்டி - கும்பகோணம் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கல்குணத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, விவசாய நிலங்கள் கடல் போல் காட்சியளிக்கின்றன. விவசாய நிலத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வடிகால்களை தூர்வார வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த பரதம்பட்டு மற்றும் அதனை ஒட்டிய மேலும் இரண்டு கிராமங்கள், மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய 72 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக, பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
ஆட்சியய் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.
காட்டுமன்னார்கோவிலில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நெல், வேர்க்கடலை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. விளை நிலங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
வெங்கடேசபுரம், மடப்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து அங்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பலர் விவசாய காப்பீடு செய்யாததால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments