இருக்கும் இடத்தை மறைத்து மோசடியில் அப்பலோ கல்லூரி..! பணத்தை இழந்த மாணவி
சென்னைக்கு மிக அருகில் பூந்தமல்லியில் கல்லூரி இருப்பதாக ஏமாற்றி மாணவர் சேர்க்கை நடத்தி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அப்பலோ கலை அறிவியல் கல்லூரி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் செலுத்திய கல்வி கட்டணத்தையும் மாற்றுச்சான்றிதழையும் பெற முடியாமல் தவிக்கும் மாணவியின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி பகுதி நேரமாக வேலைப்பார்த்துக் கொண்டே படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, பூந்தமல்லியில் இருப்பதாக கூறப்பட்ட அப்பலோ கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் பைனான்சியல் அக்கவுண்டிங் படிப்பில் சேர்வதற்காக தியாகராய நகரில் உள்ள கல்லூரியின் நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் 6 ஆயிரம் ரூபாய் தான் கல்வி கட்டணம் என கூறியதால் கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வமாய் இருந்துள்ளார்.
பின்னர் விண்ணப்ப கட்டணம் 350 ரூபாய் சேர்க்கை கட்டணம் 2650 ரூபாய் இதர கட்டணம் 15 ஆயிரம் என மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் என செலுத்த நிர்பந்தித்து உள்ளனர்.
பூந்தமல்லியில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டு படித்து வரலாம் என்ற நம்பிக்கையில் தாய் தந்தையர் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் புரட்டி கட்டணமாக மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார் சரண்யா.
இந்த நிலையில் பூந்தமல்லியில் இறங்கி அப்பலோ கல்லூரியை தேடிய மாணவி சரண்யாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் கூறிய படி பூந்தமல்லியில் அப்பலோ கலை அறிவியல் கல்லூரி இல்லை என்பதும் அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேவலூர் குப்பம் என்ற கிராமத்தில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு சென்று வருவதற்கு போதுமான அளவு அரசு பேருந்து வசதி இல்லை என்பதால் அங்கு படிக்கும் திட்டத்தை கைவிட்டு, தியாகராய நகரில் உள்ள நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பூந்தமல்லி என்று சொல்லி ஏமாற்றிவிட்டீர்களே? என்று நியாயம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் மேலும் 30 ஆயிரம் ரூபாய் கட்டினால் தங்கள் கல்லூரி பேருந்தில் சென்று வரலாம் என்று கூறி இருக்கின்றனர்.
ஆனால் சரண்யாவோ தனது பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை, கல்லூரிக்கு சென்று வருவதே சிரமமாக இருக்கும் என்பதால் கல்லூரியில் படிக்க விரும்பவில்லை என்றும், தான் செலுத்திய பணத்தை திருப்பி தரும்படியும் கூறியுள்ளார்.
ஆனால் கல்லூரி நிர்வாகமோ, சைனா பொருளை விற்ற திருவிழா கடை போல பணம் ரிட்டர்ன் கிடையாது என்று மறுத்துள்ளனர்.
அந்த மாணவியை கடந்த இரு மாதங்களாக அலைக்கழித்த நிலையில் 4ந்தேதி தனது சகோதரருடன் சென்று தனது கல்வி மாற்று சான்றிதழையும் தான் செலுத்திய பணத்தையும் மாணவி கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த கல்லூரிமேலாளர் வெங்கட்ராமன், தாங்கள் பணத்தை திருப்பித்தரமுடியாது என்றும் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்றும் மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து வேறு கல்லூரியில் சேர முடியாமலும், கொடுத்த கல்வி கட்டணத்தை திரும்ப பெற இயலாமலும் கடுமையான மன வேதனைக்குள்ளானர் சரண்யா, இதையடுத்து, அப்பலோ கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து தனது பணத்தையும், மாற்று சான்றிதழையும் மீட்டுத்தரவேண்டும் என்று மாணவி சரண்யா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவியின் இந்த குற்றச்சாட்டு குறித்து கல்லூரி மேலாளர் வெங்கட்ராமன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ரியல் எஸ்டேட் தரகர்கள் போல, தனியார் கல்லூரிகள் தங்கள் நிர்வாக வசதிக்காக நகருக்குள் முக்கியமான இடத்தில் அலுவலகங்களை அமைத்துக் கொண்டு, ஆளரவமற்ற இடத்தில் கல்லூரியை கட்டிக் கொண்டு சென்னைக்கு மிக அருகில் என்று அறிவித்து மோசடி செய்வது மாணவியின் புகார் மூலம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
அதே நேரத்தில் தங்கள் குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறையாக கல்லூரிப் படிப்பிற்குள் நுழையும் ஏக்கத்துடன் காத்திருக்கும் தனக்கு, சென்னை பெருநகர காவல்துறையினர் நியாயத்தை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் மாணவி சரண்யா ..!
Comments