வாசிப்பாளர்களை குவித்து விருது பெற்ற குடியாத்தம் நூலகம்..!
வாசிப்பாளர்கள் அருகி வரும் இந்த காலகட்டத்தில், ஒரே ஆண்டில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நூலக உறுப்பினராக்கி மாநில அளவிலான விருதைப் பெற்றுள்ளது குடியாத்தம் நூலகம். அதைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டையில் 1984ம் ஆண்டு தியாகி டி.ஏ.ஆதிமூலம் பெயரில் மாவட்ட கிளை நூலகம் திறக்கப்பட்டது. 60ஆண்டுகளாகும் இந்நூலகத்தில் கதை, கவிதை, கட்டுரை, இலக்கியம், தத்துவம், பொது அறிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் 70ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. முழுநேர கிளை நூலகமாகச் செயல்படும் இங்கு 16ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
செல்போன், இணையம் என நவீன தொழில்நுட்பங்களை மக்கள் நாடிவரும் நிலையில், நூலகங்களுக்குச் சென்று வாசிப்பது குறைந்து வருகிறது. இந்நிலையில் குடியாத்தம் நூலகம் சார்பாக பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று மாணாக்கரிடையே நூலக வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் பயனாக கடந்த ஆண்டில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதையொட்டி, மாநில அளவிலான விருதை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் இந்த நூலகத்திற்கு வழங்கினார்.
இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்கிறார் விவேகானந்தர். காலக்கடலில் நமக்கு வழிகாட்ட அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் என்கிறார் எட்வின் வி.பிப்பிள். சிறைச்சாலைகளை மூட புத்தகம் என்னும் கலங்கரை விளக்குகளை நாம் ஒவ்வொருவரும் கை கொள்வோம்!
Comments