தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக, கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து, ராமநாதபுரத்திற்கு தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், பாம்பனிற்கு தென்மேற்கே 70 கிலோ மீட்டர் தொலைவிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இன்று நண்பகல் வரை இதே நிலை நீடித்து மாலைப் பொழுதிற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கேரளாவில் மிகக் கனமழைக்கும், தெற்கு ஆந்திர கடற்கரைப்பகுதி மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதிகளில், கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, மன்னார் வளைகுடா மற்றும் தமிழ்நாட்டின் பிற கடலோரப் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments