”ஜெ.ஜெயலலிதா எனும் நான்” கம்பீர குரலுக்கு சொந்தக்காரரின் 4-வது ஆண்டு நினைவுநாள்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசியலில் இரும்புப் பெண்மணியாக வலம் வந்த அவரைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு இதோ...
லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களை கம்பீரமான இந்த கணீர்க் குரலால் தன்வயப்படுத்தியவர்தான் ஜெயலலிதா...
முன்னணி திரைப்பட நடிகை, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதலமைச்சர் என ஒவ்வொன்றிலும் கோலோச்சியவர் அவர்.
சிறு வயதிலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கிய அவர், பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பரதநாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றை முறைப்படி பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. வெண்ணிற ஆடை படத்தில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு அடுத்தடுத்து ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன.
ஆயிரத்தில் ஒருவன், ஒளிவிளக்கு, எங்கள் தங்கம், தனிப்பிறவி, முகராசி, குடியிருந்த கோவில், நம்நாடு என எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து 28 படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக அமைந்தன.
சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற அப்போதைய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஜெயலலிதா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 127 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், ஏழு மொழிகளில் பேசத் தெரிந்தவர். ஜெயலலிதா குரல்வளம் மிக்க பாடகி என்பதையும் பாடல் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார்.
1980ல் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெயலலிதா, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், சத்துணவுத்திட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. சில மாதங்கள் பிளவுபட்ட போதிலும், மீண்டும் ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தினார். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்று அசைக்க முடியாத தலைவராக விளங்கினார்.
ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகை... இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்ற ஜெயலலிதா, துணிச்சலான பெண்மணி என்று அகில இந்திய அளவில் பேசப்படும் தலைவராகவும் திகழ்ந்தார்.
பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் அவர். ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்புத் திட்டம், ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், இலவச லேப்டாப் திட்டம்...இவையெல்லாம் பிற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றிய திட்டங்களில் சிலவாகும்...
கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, லாட்டரி சீட்டை ஒழித்தது, 69 சதவீத இடஒதுக்கீட்டை ஒன்பதாவது அட்டவணையில் இடம்பெறச் செய்தது, காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தது, முல்லைப்பெரியாரில் தமிழக உரிமையை நிலைநாட்டியது போன்றவை அவரின் சாதனைகளாக பேசப்படுகின்றன...
அ.தி.மு.க.வில் இணைந்தநாள் முதல் அவர் சந்தித்த சோதனைகள் எண்ணிலடங்காதவை. இருப்பினும் அவை அனைத்தையும் சாதனைகளாக மாற்றிக் காட்டினார். அந்த வகையில் இரும்பு பெண்மணியாக கட்சித் தொண்டர்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஜெயலலிதா..
Comments