சென்னையில் 3 நாளாக மழை... தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
சென்னையிலும் புறநகர்ப்பகுதிகளிலும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சென்னையில் புதன் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வியாழன் மாலையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. இரவிலும் தொடர்ந்து மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மழைநீர் வடிகால்களும் நிரம்பி வழிந்ததால் ஒருசில பகுதிகளில் குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்தது.
சென்னை வடபழனியில் நேற்றிரவு முதல் பெய்த கனமழை காரணமாக சாந்தி காலனியில் வீடுகளுக்குள் ஒரு அடி உயரம் வரை தண்ணீர் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசுவதாகவும், தோல்நோய்கள், தொற்றுநோய்கள் ஏற்படும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தியாகராய நகர் பசுல்லா சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் கார்களும், இருசக்கர வாகனங்களும் மூழ்கித் தத்தளித்தபடி சென்றன. வீடுகளின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னை வேளச்சேரி ராம்நகரில் நிவர் புயலின்போது கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. புரெவிப் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் இப்போது மீண்டும் மழைநீர் புகுந்துள்ளது.
Comments