'பெலகாவியை உரிமை கொண்டாடும் மராட்டிய மக்களுக்கு கர்நாடகாவில் வாரியமா?' - கொதிக்கும் வட்டாள் நாகராஜ்

0 3864


கர்நாடகாவில் மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடகம் - மகாராஸ் டிர மாநிலங்களின் எல்லையில் பெல்காம் என்று அழைக்கப்பட்ட பெலகாவி மாவட்டம் அமைந்துள்ளது. மொழி அடிப்படையில் பெலகாவி மாவட்டம் தங்களுக்கே சொந்தம் என்று மகாராஸ்டிர மாநிலம் கூறி வருகிறது. இரு மாநிலங்களுக்கிடையே பெலகாவி யாருக்குச் சொந்தம் என்பதில் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்துக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெலகாவி மாவட்டத்தை மகாராஸ்டிரா உரிமை கொண்டாடி வருகிறது. கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், மராட்டிய சமூக மக்களின் வளர்ச்சிக்கு வாரியம் அமைப்பதும் நிதி ஒதுக்குவதும் கன்னட மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கன்னட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. முதலமைச்சர் எடியூரப்பா முடிவை வாபஸ் பெறக்கோரி 5-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஆனால், எடியூரப்பா அரசு முடிவை மாற்ற மறுத்து விட்டது. கர்நாடகத்தில் மராட்டிய மக்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருவதாவும், அவர்களின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை கன்னட சங்கங்கள் எதிர்ப்பது சரியல்ல எனவும் முழு அடைப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல் அமைச்சர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், கன்னட அமைப்புகள் போராட்டத்தை திட்டமிட்டப்படி போராட்டத்தைதை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ் கூறுகையில், '' கர்நாடக அரசு, மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி திட்டமிட்டப்படி 5-ந் தேதி முழு அடைப்பு நடத்துவோம். கன்னட மக்களின் உரிமையை நிலைநாட்டவே நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இதற்கு ஒட்டுமொத்த கன்னட மக்களும் ஆதரவு வழங்க வேண்டும். அரசின் மிரட்டலுக்கு நாங்கள் பணியமாட்டோம். எங்களின் இந்த முழு அடைப்புக்கு 1,600-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. கன்னடர்களின் சுயமரியாதையை காக்க வேண்டும். கன்னட மக்களுக்காக போராடுபவர்களை இந்த அரசு அவமதிக்கிறது.

முழு அடைப்பின் போது, பெங்களூருவில் முதல் அமைச்சர் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிடுவோம். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பஸ் ஊழியர்கள் மற்றும் ஆட்டோ- வாடகை கார் டிரைவர்கள் சங்கங்களின் ஆதரவையும் கேட்டு இருக்கிறோம். கர்நாடக ரக் ஷண வேதிகே அமைப்பு எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments