ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி
புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்வு ஏதும் இன்றி, ராமநாதபுரம் கடற்கரைக்கு அருகே 40 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ராமநாதபுரம் கடற்கரையிலிருந்து தென்மேற்கே 40 கிலோ மீட்டர் தூரத்திலும், பாம்பனிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை இன்னும் சில மணிநேரங்களில் கடக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரம், பாம்பன், கன்னியாகுமரியில் கடலில் மணிக்கு 55 லிருந்து 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும், ராமநாதபுரம், தூத்துக்குடி கடல்பகுதியில் 70 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற அதிக வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதி, அதையொட்டிய வங்காள விரிகுடா கடலின் தென்மேற்கு பகுதி, தெற்கு தமிழக கடலோர பகுதியில் கடல் அடுத்த 12 மணி நேரத்துக்கு மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், ஆதலால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
Comments