சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை..!

0 5901
சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த வீடுகளில் வசிப்போர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சிதம்பரத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 34 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள தெருக்களிலும் சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் இளமையாக்கினான் கோவில் குளத்தின் சுவர் இடிந்து விழுந்ததோடு, சாலையிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கோயில் குளத்தையொட்டிய மரமும் குளத்துக்குள் சாய்ந்து கிடக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில்:

இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. மூலவரான நடராஜரை சுற்றி உள்ள பிரகாரத்திலும் சுற்றுப்பிரகாரத்திலும் சுமார் 4 அடி அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. கோயிலுக்குள் எவ்வளவு மழை பெய்தாலும் அருகில் உள்ள சிவகங்கை குளத்துக்குச் சென்று, அந்தக் குளம் நிரம்பிய பின் தண்ணீர் வெளியே சென்று தில்லை அம்மன் கோவில் குளத்தில் சேரும் வகையில் கட்டமைப்பு உள்ளது. ஆனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு நீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கோவில் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி:

புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் துறைமுகத்தில் ஆறாவது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக 3000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு  மழை பெய்த போதிலும்  காலை 5 மணி முதல் தொடர்ந்து 2 மணி நேரம் விடாமல் மிதமான மழை பெய்தது.   பிரையன்ட் நகர், சிதம்பரம் நகர், மணல் தெரு, மறக்குடி,  பழைய மாநகராட்சி பகுதி உள்ளிட்ட இடங்களில் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதை சுற்றியுள்ள செம்பூர், அத்திப்பாக்கம், தெள்ளார், மருதாடு,பாதிரி, வெண்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள  கண்மாய், ஏரி குளம், உள்ளிட்ட  நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து நிரம்ப தொடங்கியுள்ளன.

ராமேஸ்வரம்:

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதேபோல் கடல் பகுதியும் வழக்கத்தை விட அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் பரவலான பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  நகரப் பகுதிகளான முதலியார்பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை, காமராஜ் நகர், நெல்லிதோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், கிராம பகுதிகளான பாகூர், அபிஷேகபாக்கம், வில்லியனூர், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்கிறது.  தொடர் மழையால் நகரப் பகுதிகளில்  தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல் கிராமப்புறங்களில்  வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

சென்னை:

சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வெளியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து, பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள், அரசு பேருந்துகளில் பயணியர் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறது. தியாகராய நகரில் சாலைகளில் பெருக்கெடுத்துப் பாய்ந்த மழைநீர், பேருந்து நிலையத்தில் புகுந்து குளம்போல் தேங்கியுள்ளது.

சென்னை கலைஞர் நகரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்குப் புறப்பட்ட பேருந்து அசோக் நகர் காமராசர் சாலையில் வந்தபோது, சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. பேருந்தில் 5 பேர் மட்டுமே பயணித்ததாலும், ஓட்டுநர் மெதுவாக இயக்கி வந்ததாலும் அனைவரும் காயமின்றித் தப்பினர். ஆலந்தூரில் இருந்து மீட்பு வாகனம் கொண்டுவரப்பட்டு ஊழியர்களின் அரைமணி நேர முயற்சிக்குப் பின் பள்ளத்தில் சிக்கிய பேருந்து வெளியே எடுக்கப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பி வழிந்து அருகிலுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர். பள்ளிக்கரணை சுற்றுவட்டாரத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நாராயணபுரம் ஏரி நிரம்பி வழிந்து எஸ்.கொளத்தூர் விடுதலை நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பாத்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் குடியிருப்புவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏரி மதகுகளைத் திறந்து தண்ணீரை வெளியேற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை வடபழனியில் நேற்றிரவு முதல் பெய்த தொடர் மழை காரணமாக சாந்தி காலனியில் வீடுகளுக்குள் ஒரு அடி உயரம் வரை தண்ணீர் புகுந்துள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், தோல்நோய்கள், தொற்றுநோய்கள் ஏற்படும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

கடலூர்:

திட்டக்குடி, பெண்ணாடம், முருகன்குடி, வடகரை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண்பாதை நீரில் மூழ்கியதால், 15க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே கீழணை வழியாக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், காட்டாறு மூலம் ஏரிக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 46.30 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுல். இதனையடுத்து ஏரிக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்துவிடப்படுவதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள், தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வடலூரில் இருந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலையும் விருத்தாசலம் அருகே பூவனூர் -  பவழங்குடி சாலையும் மழையால் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் குடிகாடு என்னும் இடத்தில் சாலையின் குறுக்கே மழை நீர் செல்வதால், அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு, குறிஞ்சிப்பாடி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. இது தவிர திட்டக்குடி, வேப்பூர் தாலுகாக்களில் 10க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் அவற்றைப் பயன்படுத்தி வந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாற்றுப் பாதைகளில் சென்று வருகின்றனர். 

கொடைக்கானல்:

கனமழை காரணமாக கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் பல இடங்களில் சாலையின் தடுப்புச் சுவர் சரிந்துள்ளதோடு, மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே சிறிய பாறைகளும் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே மலைகளின் நடுவே புதிதாக அருவிகள் தோன்றி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவது காண்போர் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில், சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தஞ்சை, திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி, சூரக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. திருவையாறு, வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் கோணங்கடுங்கல் ஆற்று வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. 

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடல் சீற்றமும் அதிகமாகக் காணப்படுகிறது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், திருக்குவளை, திருப்பூண்டி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சீற்றத்துடன் காணப்படும் கடலில் 5 முதல் 7 அடி உயரத்துக்கு அலைகள் எழுகின்றன.  மீன்வளத்துறையின் அறிவுறுத்தல்படி நூற்றுக்கணக்கான விசைப்படகுகளும் பைபர் படகுகளும் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், மருதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால், பச்சை மலையில் தொடங்கி கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டாற்று ஓடைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments