உச்சகட்டத்தில் சீனா - ஆஸ்திரேலியா பனிப்போர்... காரணம் என்ன?
ஆப்கானிஸ்தான் போர்க்குற்றம் தொடர்பாக சீனா - ஆஸ்திரேலியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் செய்த போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, அமெரிக்காவின் நட்பு நாடான ஆஸ்திரேலியா 2002 - ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் தன் துருப்புகளை நிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில், ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை, விவசாயிகள், கிராம மக்கள், கைதிகள், குழந்தைகள் என்று 39 அப்பாவிகளைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் போர்க்குற்றத்தை விசாரித்த ஆஸ்திரேலியா, போர்க்குற்றம் நடந்ததை ஒப்புக்கொண்டு, பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. அதே வேளையில் விசாரணை நியாயமாக நடக்கவில்லை என்றும் போர்க் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லிஜியன் ட்செள, ஒரு புனையப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். ஆஸ்திரேலிய ராணுவ வீரரொருவர் குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை வைத்திருப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்ட புகைப்படம் அது. குழந்தை தனது மடியில் ஆட்டுக்குட்டி ஒன்றை இறுக்கப்பிடித்திருந்தது. ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் சிலர் 14 வயதான இரண்டு ஆப்கானிஸ்தான் சிறுவர்களைக் கத்தியைக் கொண்டு குத்தி கொன்றதாக வெளியான குற்றச்சாட்டைக் குறிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை சீன செய்தி தொடர்பாளர் வெளியிட்டிருந்தார்.
இதற்கு, ஆஸ்திரேலியா கடுமையாக எதிர்வினையாற்றியது. ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், அரசியல் பழி தீர்க்க போலி புகைப்படத்தை உருவாக்கி வெளியிட்ட சீனா மன்னிப்பு கேட்பதுடன், படத்தை நீக்கவேண்டும்” என்று கண்டித்துள்ளார். அதை ஏற்க மறுத்த சீனா, “ஆஸ்திரேலியா செய்தது அசிங்கமான செயல்” என்று காட்டமாகப் பதிலளித்திருந்தது.
ஏற்கெனவே, கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்ததிலிருந்து இருதரப்பு உறவு மோசமடையத் தொடங்கியது. பதிலடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதிக்கு சீனா பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்தது. பதிலுக்கு ஆஸ்திரேலியா, சீனாவின் ஜின்ஜியாங், ஹாங்காங் மற்றும் தைவான் போன்ற விவகாரங்களில் தலையிடத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த சீனாவுக்கு ஆப்கன் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மக்களிடம் ஆஸ்திரேலிய அரசாங்கமும், அவர்களுக்குப் பின்னால் உள்ள சர்வதேச சக்திகளும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது, ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சுமார் 1500 ஆஸ்திரேலிய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் சீனாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பகுதியில் உய்குர் முஸ்லிம் இன மக்கள் விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டு, உய்குர் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்றும் சீன அரசு மீது சர்வதேச அளவில் ஏராளமான குற்றச்சாட்டு உள்ள நிலையில், சீனா ஆப்கன் போர்க்குற்றத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
Comments