பள்ளி வகுப்பறையில் வைத்து தாலி கட்டிய பொல்லாத 2k கிட்ஸ்..! 11 ஆம் வகுப்பு படிக்கையிலே..!

0 35716

கொரோனாவால் மாதக்கணக்கில் சந்திக்க இயலாமல் தவித்த பள்ளிக்கூட காதல் ஜோடி ஒன்று பள்ளியின் வகுப்பறையில் வைத்து தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. படிக்கின்ற வயதில் காதலில் விழுந்து வாழ்க்கையோடு சேர்த்து படிப்பையும் தொலைத்த 2kகிட்ஸின் விபரீத செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கொரோனா ஊரடங்கு முடிந்து ஆந்திராவில் கடந்த சில வாரங்களாக பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் அரசு ஜூனியர் கல்லூரி என்றழைக்கப்படும் மேல்நிலைப்பள்ளியில் சத்தமில்லாமல் விபரீத சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர் இரு 2K கிட்ஸ்.

இந்தப் பள்ளியில் பதினோன்றாம் வகுப்பு படித்து வரும் மைனர் மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் மைனர் மாணவியை காதலித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் சந்திக்க இயலாமல் தவித்த ஜோடி மீண்டும் பள்ளிக்கூடம் திறந்ததால் உற்சாகமடைந்தனர். மேலும் மீண்டும் தங்கள் காதலில் பிரிவு வந்து விடகூடாது என்று விபரீத செயல் ஒன்றை அரங்கேற்றினர்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் வைத்து அந்த மாணவன் தனது காதலியான அந்த மாணவிக்கு மஞ்சள் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

மேளமின்றி தாளமின்றி சைலண்டாக நடந்த இந்த தாலிகட்டும் வைபவத்தை செல்போனில் படமாக்கிய மற்றோரு சக மாணவர் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால், ஜூனியர் காலேஜில் நடந்த வில்லங்க திருமணம் வெளிச்சத்திற்கு வந்தது.

பள்ளி மாணவர்களின் இந்த திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி கல்லூரி முதல்வரின் பார்வைக்கு சென்ற நிலையில் விபரீத சம்பவத்தை பள்ளியின் வகுப்பு அறையில் அரங்கேற்றிய மூவரையும் பள்ளியில் இருந்து நீக்கி டி.சி.யை கையில் கொடுத்து அனுப்பினார்.

இருவருக்கும் 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பதால் இந்த திருமணம் செல்லாது என்று கூறப்படும் நிலையில், பருவக்கோளாறில் தாலிகட்டிக் கொண்ட இந்த 2kகிட்ஸ்-களால் அவர்களது பெற்றோருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் வீட்டார் தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிக்கூடம் சென்று பாடங்களை படிக்கின்ற வயதில் காதலில் விழுந்தால் முடிவில் படிப்பை தொலைத்து வீதியில் தவிக்கும் நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments