வாங்கிய லஞ்சத்துக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்... கலெக்டர் அலுவலகத்தில் வேலையில் சேர போனவர்களுக்கு என்ன நடந்தது?
ஈரோடு அருகே பட்டதாரி இளைஞர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் அரசுப் பணி வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ரூ. 1 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு அருகேயுள்ள மரப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் பாலச்சந்தர். பாலச்சந்தரும் அவரின் நண்பர்கள் சிலரும் பட்டதாரி இளைஞர்களிடத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறையில் பணியிடங்கள் காலியாகவுள்ளது. தங்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகளிடத்தில் செல்வாக்குள்ளது. எனவே, பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். குறிப்பாக அப்பாவியான இளைஞர்களை குறி வைத்து இந்த கும்பல் மூளைச்சலவை செய்துள்ளது. இந்த கும்பலின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்களுக்கு தமிழக அரசு முத்திரையுடன் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரையும் பாலச்சந்தர் கொடுத்து, உடனடியாக பணியில் சேருமாறு கூறியுள்ளார். சொன்ன வார்த்தை தவறாமல் நடந்த பாலச்சந்தருக்கு அப்பாயின்ன்ட்மென்ட் ஆர்டர் பெற்ற இளைஞர்கள் நன்றியும் தெரிவித்தனர்.
அரசு வேலை எளிதாக கிடைத்த மகிழ்ச்சியில் அந்த அப்பாவிகள் துள்ளிக்குதித்தனர். பின்னர், பாலச்சந்தர் கொடுத்த அப்பாயின்ட் மென்ட் ஆர்டருடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறையில் பணியில் சேர சென்றனர். அப்போதுதான், தங்களிடம் பாலச்சந்தம் கொடுத்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்கள் போலியானவை என்பது அந்த இளைஞர்களுக்கு தெரிய வந்தது. தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் , பாலச்சந்தரின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீடு பூட்டி கிடந்துள்ளது. பாலச்சந்தர் தன் தந்தை சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். அதே போல, பாலச்சந்தரின் நண்பர்களும் காணாமல் போய் விட்டனர். அரசு வேலை கிடைக்கும் என்று எண்ணி லஞ்சம் கொடுத்தவர்கள் இப்போது நொந்து போய் கிடக்கிறார்கள். பாலச்சந்தர் கும்பல் சுமார் 59 பேரிடத்தில் ஒரு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்தில் நேற்று புகாரளித்தனர். தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments