சாப்பிடுவது இந்தியத் தேனா அல்லது சீனா செயற்கை பாகா? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

0 21777

தேன் வணிகத்தில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனங்கள் பல தேனுடன் சர்க்கரைப் பாகு கலப்பதும், கலப்படம் செய்வதற்காகவே சீனாவிலிருந்து செயற்கை சர்க்கரை பாகை இறக்குமதி செய்வதும் தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் டாபர், பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்களின் தேன்களில் சர்க்கரை பாகு கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.

நம் மண்ணின் பாரம்பரிய உணவுப் பொருள்களில் மகத்துவம் நிறைந்தது தேன். நாம் உண்ணும் உணவில் மிகவும் சத்தான பொருள்களில் தேனுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு.  உடலுக்கு பல்வேறு நன் மைகளை செய்யும் தேன் மலமிளக்கி, கோழையகற்றி, பசித்தீ தூண்டி, அழுகல் அகற்றி மற்றும் உறக்கம் உண்டாக்கியாகச் செயல்படுகிறது. சித்த மருத்துவத்தில் தேன் ஒரு மிகச் சிறந்த துணை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. `வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற முக்குற்றங்களையும் தன் நிலையில் வைக்கும் ஒரு அருபெரும் மருந்து தேன்' எனகின்றன சித்த நூல்கள்.

image

உணவாகவும் மருந்தாகமும் பயன்படும் பொக்கிஷமான தேனை, பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து விற்று வருகின்றன. இந்தியாவில், ‘உண்மையான தேன்’ என்று பிரபல நிறுவனங்கள் விற்கும் தேன்களில், 13 பிராண்டுகளை ஆய்வு செய்ததில்  10 பிராண்டுகளில் சர்க்கரைப் பாகு கலக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டாபர், பதஞ்சலி, ஜண்டு, பைத்யநாத், அப்பிஸ் ஹிமாலயா, ஹிட்கரி உள்ளிட்ட முன்னணி தேன் தயாரிக்கும் நிறுவனங்களின் மாதிரிகள் சோதனையில் தோல்வியடைந்துள்ளன.

இது குறித்து, ஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment ) இந்தியாவின் முக்கியமான 13 பிராண்டுகளின் தேன் மாதிரிகளை அனுப்பி பரிசோதனை செய்தது. ’அணுகாந்த ஒத்ததிர்வு’ (Nuclear Magnetic Resonance ) என்ற நவீன முறையில் சோதனை செய்தபோது தேனில் சர்க்கரைப் பாகு கலக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி தேன் பிராண்டுகளை சோதனை செய்ததில் சஃப்போலா, மார்க்ஃபெட் சோஹனா மற்றும் நேச்சர் நெக்டரின் இரண்டு மாதிரிகளில் ஒரு மாதிரி மட்டுமே ((  Saffola, Markfed Sohna and Nature’s Nectar (one sample of two))  கலப்படமில்லாத தேன் இருந்தது தெரியவந்துள்ளது. அணுகாந்த ஒத்ததிர்வு சோதனை இந்திய சட்டத்துக்கு அவசியமில்லை. ஆனால், தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இது தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

image

ஆய்வு முடிவு குறித்து சி.எஸ்.இ - இன் உணவுப் பாதுகாப்பு மற்றும் நச்சுக் குழுவின் திட்ட இயக்குநர் அமித் குரானா, “நாங்கள் கண்டுபிடித்தது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் கலப்படம் செய்யப்பட்ட வர்த்தகம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.  சர்க்கரைப் பாகு கலந்த தேனை உண்ணும்போது உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால், தேனுடைய தரம் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு நெறிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய நிறுவனங்கள் பல தேன் தயாரிப்பதற்காகவே சீனாவிலிருந்து செயற்கை சர்க்கரைப் பாகை  இறக்குமதி செய்யடுகின்றன. இந்த பாகு கலப்படம் செய்யப்பட்ட தேனை தூய தேனாகக் காண்பிக்க பயன்படுத்தப்படுகிறது என்று  சி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவு பிரபல தேன் தயாரிப்பு நிறுவங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஆய்வு முடிவுகளை பல நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இது குறித்து டாபர் நிறுவனம், “இந்த ஆய்வு அறிக்கை உள்நோக்கம் கொண்டது. எங்கள் நிறுவனம் மீது அவதூறு பரப்புவதற்காகவே ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது.  விதிமுறைகளுக்கு உட்பட்டே நாங்கள் தேன் தயாரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம், “இயற்கை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் எங்களைக் கலங்கப்படுத்த நடந்த சதி” என்று அலறியுள்ளது. இவர்களைப் போலவே ஜண்டு பிராண்டும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments