ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்களுக்கு விஷம் வைத்த விஷமிகள்... மகள்கள் திருமணம் தடைபட்டதால் கதறிய மனிதர்
கடலூர் அருகே குட்டையில் விஷம் கலந்ததில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் இறந்து போனதால், ஒரு குடும்பமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள நாட்டார் மங்கலம் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன்.இவர், குட்டை ஒன்றை உருவாக்கி மீன்களை வளர்த்து வந்தார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் பாலகிருஷ்ணன். இவருக்கு திருமண வயதில் 3 பெண்கள் உள்ளனர். இந்த குட்டையின் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் இரு மகள்களுக்கு திருமணம்ட செய்து வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தனது குளத்துக்கு மீன்களுக்கு உணவு வைக்க சென்றுள்ளார்.
அப்போது, குளத்தில் பாலகிருஷ்ணன் வளர்த்து வந்த மீன்கள் அனைத்தும் இறந்து போய் மிதந்துள்ளன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் சம்பவம் குறித்து ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சுதா, பாலகிருஷ்ணனுக்கு ஆதரவு கூறினார். பிறகு, இந்த சம்பவம் குறித்து காட்டுமன்னார் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விஷமிகள் சிலர் உள்நோக்கத்துடன் குட்டையில் விஷம் கலந்திருக்கலாம், இதனால் மீன்கள் இறந்து போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விஷமிகள் மீன்களுக்கு விஷம் வைத்து கொன்றதால், சொல்ல முடியாத அளவுக்கு துயரம் அடைந்த பாலகிருஷ்ணனும் அவரின் மனைவியும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
Comments