"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த" ஏரோநாட்டிகல் என்ஜினீயர்..!

0 110504
"திருட்டு புல்லட் என்ஜினில் திறமையாய் சம்பாதித்த" ஏரோநாட்டிகல் என்ஜினீயர்..!

திருட்டு புல்லட் வாகனங்களின் என்ஜின்கள் மூலம் சிறிய ரக கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை உருவாக்கி ஹிஸ்துஸ்தான் கல்லூரி, டெல்லி ஐஐடி, கான்பூர் ஐஐடி உட்பட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு சிறிய ரக கார், சிறிய ரக ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த ஏரோநாட்டிகல் என்ஜீனியர் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். வாட்ஸ்ஆப் குழு அமைத்து புல்லட் வாகனங்களை குறி வைத்து திருடிய கும்பல் சிக்கியதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சென்னையில் புல்லட் வாகனங்களை மட்டும் வாட்ஸ் அப் குழு அமைத்து திருடி, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கடத்தி விற்ற 9 பேர் கும்பலை, கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணித்து பிடித்து 29 புல்லட் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று சென்னையில் தொடர் புல்லட் திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த சுல்தான் லியாகத் அலி, மணலியை சேர்ந்த பாஸ்கர், புதுப்பேட்டையை சேர்ந்த இஸ்மாயில் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 புல்லட்டுகள், 6 உயர் ரக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரையும் மீட்டுள்ளனர். இதில் இஸ்மாயில், திருடப்பட்ட புல்லட் வாகனங்களை உதிரி பாகங்களாக பிரித்து கொடுத்து வந்துள்ளார்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களின் எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்களை கோட்டூர்புரத்தை சேர்ந்த சோகன்குமார் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சோகன்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்துவிட்டு, கொட்டிவாக்கம் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சோகன்குமார், ரேஆன் சிக்னேஷர் என்ற வலைதளத்தில் தான் தயார் செய்த ப்ராஜெக்ட்களை விளம்பரம் செய்ததோடு, தனது நிறுவனத்தின் மூலம் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு ப்ராஜெக்ட்களையும் செய்து கொடுத்துள்ளார்.

குறிப்பாக சென்னை ஹிஸ்துஸ்தான் கல்லூரி, டெல்லி ஐஐடி, கான்பூர் ஐஐடி உட்பட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு திருட்டு இருசக்கர வாகனங்களின் எஞ்சின்களைப் பயன்படுத்தி சிறிய ரக கார், சிறிய ரக ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதவிர, திருட்டு எஞ்சின்களை வைத்து இரும்புத்திரை முதல் மற்றும் இரண்டாம் பாகம் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக பைக் ஒன்றையும் தயாரித்து கொடுத்துள்ளார். விசாகப்பட்டினம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களுக்கு புதுவிதமாக பைக்கை வடிவமைத்து கொடுத்ததோடு, திருடிய இருசக்கர வாகனத்தில் எஞ்சின்களை எடுத்துவிட்டு வேறொரு எஞ்சினை பொருத்தி ஹைதராபாத், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்று வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் லியாகத் அலி,பாஸ்கர் ஆகியோரிடம் சோகன்குமார் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்களை வாங்கி ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ப்ராஜெக்ட் செய்து கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

புல்லட் திருட்டு தொடர்பாக இதுவரை 13 பேரைக் கைது செய்துள்ள தனிப்படை போலீசார் மொத்தம் 39 புல்லட்களையும், 6 உயர் ரக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் திருடிய இருசக்கர வாகனத்தை உடனடியாக உதிரி பாகங்களாக பிரித்தெடுக்கும் கும்பல் புதுப்பேட்டையில் செயல்பட்டு வருவதாகவும் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments