ஜாதி சண்டை மைதானமான ப்ரீஃபையர் விளையாட்டு..! உயிர்பலியாகும் முன் தடுக்கப்படுமா ?

0 30683

பப்ஜிக்கு பதிலாக சிறுவர்கள் விளையாடும் ப்ரீ பயர் விளையாட்டில் ஜாதி ரீதியாக பெயர் வைத்து சிறுவர்கள் சண்டையிட்டுக் கொள்வதும், ஆயிரக்கணக்கில் பணத்தை பறிக்கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ப்ரீ பயர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

இந்த சின்ன வயதிலேயே வெட்டு, குத்து, அடி, உதை என்று வன்முறை எண்ணத்துக்கு தூபம் போடும் ப்ரீ பயரின் தாக்கத்துக்குள்ளான சிறுவர்களின் ஆவேச குரலை கேட்டாலே புரியும் இந்த ஆன்லைன் விளையாட்டின் ஆபத்து..!

பல குடும்பத்தில் ஆன் லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவர்களின் வாழ்க்கையை சீரழித்த ப்ளூவேல், பப்ஜி ஆகிவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்திய செயலி என்ற இனிப்பு தடவிய விஷமாக சிறுவர்களிடம் பகிரப்பட்டு வரும் விபரீத விளையாட்டு செயலி தான் ப்ரீ பயர்..!

பப்ஜியை போலவே அனைத்து தீமைகளும் நிறைந்த இந்த விளையாட்டிற்கு அடிமையான பல சிறுவர்கள் ஆன்லைன் படிப்பிற்காக வாங்கிய செல்போனிலும், பெற்றோரின் செல்போனிலும் தொடர்ந்து விளையாடி அடிமைகளாகி கிடக்கின்றனர்.

முன்பெல்லாம், கிட்டிப்புல், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து என்று சுறு சுறுப்பு காட்டிய நம்ம ஊர் புள்ளைங்க, குட்டிச்சுவற்றுக்கும், பட்ட மரத்துக்கும் அடியில் கும்பலாக அமர்ந்து கொண்டு வெறித்தனமாக ப்ரீ பயர் விளையாடி வருகின்றனர்.

தங்கள் பிள்ளை வெளியே சென்றால் கெட்டுவிடுவான் என்று கையில் செல்போன் கொடுத்து பழகிய பாவத்திற்கு வீட்டுக்குள் இருந்தாலும் ப்ரீபயர் விளையாடி கெட்டுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் ப்ரீபயரில் ஆடைகள் மற்றும் ஆயுதம் வாங்க தனது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பறிகொடுத்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

இதற்கு முழுக்க முழுக்க ஆன்லைன் கல்விக்காக வாங்கி கொடுக்கப்பட்ட ஆண்டிராய்டு செல்போன்கள் தான் காரணம் என்று சுட்டிக்காட்டும் பெற்றோர், உடனடியாக பாதுகாப்புடன் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செல்போன்களை சிறுவர்கள் கையில் இருந்து திரும்ப பெற இயலும் என்கின்றனர்.

இவற்றிற்கு எல்லாம் உச்சக்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் , விளாத்திக்குளம், கோவில்பட்டி சுற்று வட்டாரபகுதியில்  ப்ரீ பயர் விளையாட்டை ஜாதி சண்டை மைதானமாக சில சிறுவர்கள் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது

ஒவ்வொருவரும் தங்கள் ஜாதி பெயரில் தனி அடையாளத்துடன் சேர்ந்து கொண்டு எதிரில் உள்ள மற்ற சாதியை சேர்ந்தவர்களை தாக்குவது போன்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டு விளையாடுவதால் அண்மையில் சிலருக்கு இடையே ஏற்பட்ட தகராறு சாதி மோதலாக மாறும் சூழல் உண்டான நிலையில் காவல்துறையினர் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மாணவர்களின் படிப்பையும் வாழ்க்கையும் பாழ்படுத்தும் ப்ரீபயர் விளையாட்டிற்கு தடைவிதித்து அரசு உடனடி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதே பெற்றோரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments