இலங்கையில் திரிகோணமலை அருகே நள்ளிரவில் கரை கடந்தது புரெவி புயல்... 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது
இலங்கையில் திரிகோணமலை அருகே பலத்த சூரைக்காற்று மற்றும் பெரும் மழையுடன் நள்ளிரவில் புரெவி புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையில் திரிகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கரையை கடக்கத் தொடங்கியது. நள்ளிரவு 11.30 மணி அளவில் புரெவிப் புயல் கரையைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பனுக்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், இன்று மன்னார் வளைகுடா பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, இன்று மாலை அல்லது நாளை அதிகாலை புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது அதிக பட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை,தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments