பணம் திருட்டு நாடகம்.. தாயைக் காட்டிக் கொடுத்த தனயன்

0 14385
பணம் திருட்டு நாடகம்.. தாயைக் காட்டிக் கொடுத்த தனயன்

சென்னையில் தொழிலதிபரின் மனைவி தனது வீட்டில் இருந்து 42 லட்ச ரூபாயை திருடி தனது முக நூல் காதலனுக்கு கொடுத்து விட்டு, உறவினர் திருடிவிட்டதாக நாடகமாடியுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் 4 வயது மகன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தால் வசமாக சிக்கிக் கொண்டார். 

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. அவருக்கு தன்ஸிம் என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் அன்சாரி, வியாபாரம் தொடர்பாக அவ்வப்போது வெளியூர் சென்றுவிட்டு பணத்துடன் வீட்டிற்கு வருவது வழக்கம்.

இதனால் அவரது வீட்டில் எப்போதும் லட்சக்கணக்கில் பணம் இருக்கும். இந்த நிலையில் அன்சாரியின் 4 வயது மகனுக்கும், அவரது தங்கை மகனுக்கும் கடந்த மாதம் 20-ந் தேதி வீட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடியுள்ளனர். விழா முடிந்த பிறகு இரவு வீட்டில் இருந்த சுமார் 42 லட்ச ரூபாய் காணாமல் போனது கண்டு தமீம் அன்சாரி அதிர்ச்சியடைந்தார்.

தமீம் அன்சாரியின் தங்கை கணவர் கருப்பு நிற பை ஒன்றை எடுத்துச் சென்றதை தனது 4 வயது மகன் பார்த்துதாக அவரது மனைவி தன்ஸிம் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

அந்த சிறுவனை அழைத்து விசாரிக்க அவனும் தனது மாமா கருப்பு நிற பையை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளான். இதனால் அவர் தான் பணத்தை திருடியதாக நினைத்து வீட்டிற்குள்ளேயே விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் தான் பணம் எடுக்கவில்லை என அவர் பலமுறை கூறியதால், இரு தினங்கள் கழித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொழிலதிபர் தமீம் அன்சாரியின் மனைவி தன்ஸிம் சொன்ன குற்றச்சாட்டை வைத்து முதலில் அவரது உறவினரை போலீசாரும் துருவி துருவி விசாரித்தனர்.

சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட அந்த வாரம் முதல் வீட்டின் சிசிடிவி கேமராவும் இயங்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், நேரில் பார்த்ததாக சாட்சி சொன்ன தன்ஸிமின் 4 வயது மகனை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது சிறுவன் "தனது மாமா தான் திருடினார்" என அம்மா அனைவரிடமும் சொல்ல சொன்னதாக உண்மையை போட்டு உடைத்து போலீசார் உள்பட அனைவரையும் அதிர வைத்தான்.

தொழிலதிபரின் மனைவி தன்ஸிம் போலீசார் விசாரிக்க தொடங்கி, அவரது செல்போனை ஆய்வு செய்ததில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் அடிக்கடி பேசி வந்ததை கண்டுபிடித்து அவரை பிடித்து விசாரித்தனர். ரியாஸ், தொழிலதிபரின் மனைவி தன்ஸிமிற்கு முக நூல் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

தமீம் அன்சாரி அடிக்கடி வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்று விடுவதால், தன்ஸிம், ரியாஸ் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டு பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அவ்வப்போது வீட்டில் இருந்து பணத்தை எடுத்துச் சென்று ஜாலியாக சுற்றி வந்த தன்ஸிம் பெரும் தொகையை திருடிக் கொண்டு முகநூல் காதலன் ரியாஸுடன் செல்ல சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகனின் பிறந்த நாள் விழா வர, அதற்கு முன்பு வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் திட்டமிட்டு பழுதை ஏற்படுத்தியுள்ளார். பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாளே பணத்தை எடுத்து ரியாஸிடம் கொடுத்து விட்டு, மறுநாள் பணம் உறவினரால் திருட்டு போனதாக நாடகமாடியுள்ளார்.

குழந்தைகள் சொன்னால் நம்பி விடுவார்கள், என நினைத்த தன்ஸிம் தனது மகனை அவ்வாறு கூற சொல்லியது விசாணையில் அம்பலமானது. இதையடுத்து ரியாஸுடம் இருந்து 42 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த பட்டினப்பாக்கம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments