ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி... 303 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 303 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கான்பெராவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 16 ரன்களிலும், சுப்மன் கில் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி 63 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும் விளாசினர். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் சேர்த்தது.
இந்த போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜன், டி20 அணியில் இடம்பெற்றார்.
இதனிடையே வேகப்பந்து வீச்சாளர் சைனிக்கு காயம் ஏற்பட்டதையடுத்து ஒருநாள் அணியிலும் நடராஜன் சேர்க்கப்பட்டார். இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் இடம் பிடித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடராஜன் அறிமுகம் ஆகியுள்ளார்.
Comments