பூர்வீக சொத்தால் தகராறு! - மூன்று வயது குழந்தைக்கு எமனாக மாறிய உறவினர் பெண்
ராணிப்பேட்டை அருகே சொத்துத் தகராறில் 3 வயது பெண் குழந்தையைக் கிணற்றில் வீசிக்கொன்ற உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் செட்டி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவர் கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். இவரது குடும்பத்துக்கும் இவரது அண்ணன் சேட்டுவின் குடும்பத்துக்கும் இடையே, பூர்வீக வீடு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நீண்ட காலமாகப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதில், அண்ணன் தம்பி சண்டையை விடவும் அவர்களின் மனைவிகளான ராஜேஸ்வரி - ராணிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கள் கிழமையன்று மதிய வேளையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த காந்தியின் மூன்று வயது மகள் கோபிகாவை காணவில்லை. சுற்று வட்டாரப் பகுதியில் பல மணி நேரம் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. தொடர்ந்து, ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் காந்தி புகார் அளித்தனர். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் காந்தியின் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திங்கள்கிழமையன்று மதியம் ஒன்றரை மணிக்குக் குழந்தை அந்தப் பகுதியில் விளையாடியபோது, பெண் ஒருவர் அழைத்துச் செல்வதும், காட்சியும் இரண்டு நிமிடம் கழித்து அந்தப் பெண் மட்டும் திரும்பி வந்ததும் பதிவாகியிருந்தது. ஆனால், அந்தப் பெண்ணின் முகம் சிசிடிவி காட்சியில் சரியாகத் தெரியாததால், போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை.
இந்த நிலையில், சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள பெண்ணின் நடை, உடை, பாவனை ஆகியவற்றைக்கொண்டு போலீசார் விசாரித்தனர். அதில், காந்தியின் அண்ணன் சேட்டுவின் மனைவி ராணிதான் அந்த பெண் என்பது தெரியவந்தது. போலீசார் ராணியிடம் விசாரித்த போது, அவர் மயக்கமடைந்துள்ளார். தொடர்ந்து ராணிக்கு வலிப்பு வந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், சிசிடிவி காட்சி பதிவான இடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலுள்ள 20 அடி ஆழ கிணற்றுக்குள் குழந்தை வீசப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. உடனே, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றிலிருந்த நீர் முழுவதும் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. சுமார், 8 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையின் சடலத்தைத் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து மீட்டனர்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ராணி குழந்தையை அழைத்துச்சென்று கிணற்றில் வீசி எறிந்து கொன்றது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை போலீசார் ராணி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ராணி தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்றுவருகிறார். சிகிச்சை முடிந்ததும் மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments