ஆயிரக்கணக்கானோருக்கு பயிற்சியளித்த ஓசூர் கொய்மலர் மகத்துவ மையம் - பார்வையிட்ட இஸ்ரேல் அதிகாரிகள்
ஓசூர் அருகேயுள்ள தளி கொத்தனூரில், இந்தியா - இஸ்ரேல் அரசு கூட்டு ஒப்பந்தத்தில் ரூ. 880 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கொய்மலர் மகத்துவ மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்கு இஸ்ரேல் நாட்டின் உயர் தொழில்நுட்பத்தில், செயல் விளக்கங்களுடன் கொய்மலர்கள் சாகுபடி செய்வதற்குப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை இந்த மையத்தில் விவசாயிகள், அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட 7455 பேர் உயர் தொழில்நுட்ப முறையில் கொய்மலர் சாகுபடி பயிற்சிகளைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கொய்மலர் மகத்துவ மையத்தை இஸ்ரேல் நாட்டு கவுன்சில் ஆப் ஜெனரல் ஜோனாத்தன் ஜட்கா மற்றும் துணை கவுன்சில் ஆப் ஜெனரல் ஏரியல் சீட்மேன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது கொய்மலர் மகத்துவ மையத்தில் சாகுபடி செய்யப்பட்ட ஹெலிகோனியா, ரெட் ஜிஞ்சர் லில்லி, டார்ச் லில்லி, பர்ட் பாரடைஸ் லித்தியம் ஒயிட், ஆர்சிட்ஸ் வைலட், கார்னேசன் ரோஸ், பிரேசியா, கோல்டு ரெட் லிவ்ஸ் உள்ளிட்ட ஏராளமான மலர்களைப் பார்வையிட்டனர். பிறகு, கொய்மலர் செடிகளை இருவரும் நடவு செய்தனர்.
தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் பெற்று பசுமைக் குடில்கள் அமைத்துள்ள விவசாயிகளின் தோட்டங்களுக்குச் சென்று, கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதைப் பார்வையிட்டனர். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பசுமைக் குடில் அமைத்தும், ஊடுபயிராகவும் கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளிர் பிரதேசத்தில் அதிகம் சாகுபடியாகும் கொய்மலரானது மலர் அலங்காரம், பூங்கொத்து மற்றும் அழகுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Comments