விருதுக்கு ஆசைப்பட்டு சென்ற ரியல்எஸ்டேட் அதிபர் கடத்தல்...நாடகம் நடத்தி கும்பலை பிடித்த போலீஸ்!
விருது தருவதாகக் கூறி தந்திரமாக ஏமாற்றப்பட்டு, கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் சாமர்த்தியமாக மீட்டதுடன் குற்றவாளிகள் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் மதுரை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கணேஷ்குமாரைப் பாராட்டி விருது வழங்குவதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் உள்ள தனியார் மண்டபத்துக்கு வரவேண்டும் என்று சிலர் அழைத்துள்ளனர். அதை நம்பிய கணேஷ்குமார் கடந்த மாதம் 25 - ம் தேதி விருது வாங்கச் சென்றபோது, மர்ம கும்பல் ஒன்று அவரைக் கடத்தியுள்ளது.
விருது வாங்கச் சென்ற கணேஷ்குமார் திரும்பாததையடுத்து அவரது நிறுவனத்தின் மதுரைக் கிளை ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், கணேஷ்குமாரின் மதுரை அலுவலகத்துக்கு போன் செய்த கடத்தல்காரர்கள், ‘அலுவலகத்துக்கு வரும் எங்கள் கூட்டாளியிடம் ரூ. 10 லட்சம் கொடுத்தால் கணேஷ்குமாரை விடுவிப்பதாகவும், இல்லையென்றால் கொலை செய்து செய்து விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் அதிரடியாகத் திட்டமிட்டனர். கடத்தல்காரர்கள் அழைத்த செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது ஈரோட்டில் இருப்பது தெரியவந்தது. போலீசாரின் திட்டப்படி, மதுரை அலுவலகத்துக்கு வந்த கடத்தல்காரர்களின் கூட்டாளிகளிடம் ஊழியர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ரூ. 10 லட்சத்தைக் கொடுத்தனர். இதையடுத்து, கணேஷ்குமார் விடுவிக்கப்பட்டார். பின்பு, பணத்துடன் மதுரையிலிருந்து காரில் சிவகங்கை சென்றுகொண்டிருந்த கூட்டாளிகளான இரண்டு வாலிபர்களைப் போலீசார் பின்னாலேயே விரட்டிச்சென்று பிடித்து ரூ. 10 லட்சம் பணத்தை மீட்டனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கைதானவர்கள் சிவகங்கையைச் சேர்ந்த அஜீத்குமார் மற்றும் காளையார் கோவிலைச் சேர்ந்த மருது மலர்மன்னன் என்பது தெரியவந்தது. இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் விருதுநகர் சிறையில் அடைத்தனர். போலீஸாரிடத்தில் கூட்டாளிகள் பிடிபட்டதையடுத்து ஈரோட்டிலிருந்து கடத்தல் கும்பல் தப்பி ஓடி விட்டது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட தொழிலதிபரைப் போலீசார் பத்திரமாக மீட்டதைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
Comments