சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் மகளிருக்கான மென் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி - மாவட்ட ஆட்சித் தலைவர்
ஒகேனக்கல்லில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மகளிருக்கான மென் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ் பி கார்த்திகா அவர்கள் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஒரு சுற்றுலா தலமாகும். இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பரிசல் ஓட்டுதல் மசாஜ் செய்தல் உள்ளிட்ட தொழில்களையும், பெண்கள் மீன் சமைப்பது உள்ளிட்ட தொழில்களையும் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ள காலங்களில் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாத பொழுது இவர்கள் வருமானம் மிகவும் பின் தங்கியதாகவே இருக்கும்.
இந்த நிலையைப் போக்கிட இப்பகுதியை சேர்ந்த பெண்கள் அவ்வப்போது பொம்மைகள் சிலவற்றை விற்பனை செய்து வந்தவாறு இருந்தனர்.
இதற்கான மென் பொம்மைகளை சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தனர். இதனால் இவர்களுக்கான லாபம் என்பது மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில், இவர்கள் விற்பனை செய்யும் மென் பொம்மைகளை இவர்களே தயாரித்து விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டது.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மகளிர்களுக்கு, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் மென் பொம்மைகள் தயாரிப்பிற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியானது 13 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சுய தொழில்கள் தொடங்கவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இதனை இப்பகுதியைச் சேர்ந்த மகளிர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ் பி கார்த்திகா அவர்கள் கேட்டுக் கொண்டார்.
Comments