காய்ந்து போய் கிடக்கும் காஞ்சி கோயில் குளங்கள்.. நிவர் புயலால் கிடைத்த மழையாலும் பலனில்லை!

0 2605

நிவர் புயலால் பெய்த மழையாலும் காஞ்சிபுரத்திலுள்ள கோயில் குளங்கள் நிரம்பாமல் வறண்டு காணப்படுவது சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

நம் முன்னோர்களும் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் தவிர்ப்பதற்க்காக கோயில்களுக்கு அருகே திருக்குளங்களை அமைத்தனர். மழை பெய்கின்ற போது மழை நீர் கோவில் திருக்குளங்களில் நிரம்புவதால், அந்த பகுதியின் நீர் மட்டம் உயரும். இதன் காரணமாக குடிநீர் பஞ்சம் இல்லாத நிலை இருந்தது. தற்போது, காஞ்சிபரம் கோயில் குளங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால், வரத்து கால்வாய்கள் அடைபட்டு கிடப்பதால் இந்த குளங்கள் நீரின்றியும், புதர்கள் மண்டியும் காணப்படுகின்றன.

காஞ்சிபுரம் நகரத்தில் ஏகாம்பரநாதர் கோயில், மங்களதீர்த்த குளம்,வைகுண்டப் பெருமாள் கோவில், ரங்கசாமி குளம், பொய்யாகுளம், அஷ்டபூஜப் பெருமாள் கோவில் குளம், என 10- க்கும் மேற்பட்ட குளங்கள்உள்ளது. நிவர் புயலால் பெய்தன கன மழையால் 5 ஆண்டுகளாக வறண்டு கிடந்த காஞ்சிபுரம் பாலாற்றில் கூட தற்போது மழை வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வழிந்தோடுகிறது.ஆனால் காஞ்சிபுரத்திலுள்ள கோயில் குளங்களில் சிறுதளவு கூட நீர் வரத்து இல்லாதது சமூக ஆர்வலர்களிடையேயும்,பொது மக்களிடையேயும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது பெய்த கன மழையின் போது கூட காஞ்சிபுரம் நகரில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் கழிவு நீர் ஓடையில் கலந்தே வீணாகியது. காஞ்சிபுரம் பெருநகராட்சி நீர்வரத்து கால்வாய்களை சரியான திட்டமிடுதலுடன் அமைக்காத காரணத்தால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் வீணாகும் நிலையேதான் தொடர்கிறது. கோயில் குளங்களை பராமரிப்பு பணி என்ற பெயரில் பல லட்சங்கள் செலவழித்தாலும், குளங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

காஞ்சிபுரம் நகரத்தின் நிலத்தடி நீரை குறையாமல் பாதுகாக்க கோயில் குளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குளங்களை சரியான முறையில் பராமரித்து தூர் வாரி மழை நேரத்தில் நீர் குளங்களுக்கு செல்லும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும். இதனால், காஞ்சிபுரம் பகுதியில் நீர் மட்டத்தை உயர்த்த முடியுமென்று மக்கள் நம்புகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments